Apr 28, 2011

பூவா?தலையா?

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே!

ஆதாம்-ஏவாள் என்ற இரண்டே மனிதர்கள் வாழ்ந்த காலத்திலும் அதுவும் மொழியென்ற எந்த ஒரு சமிக்ஞை அவர்கள் நடுவில் இல்லாத பொழுதும் 'கனியை உண்ணுவதா?வேண்டாமா?' என்ற கருத்து வேறுபாடு துவங்கிவிட்டது. அன்று ஆரம்பித்த 'தான் செய்வதே சரி, தான் நினைப்பது தான் சரியானது' என்ற இந்த கருத்து வேறுபாடு இன்றைய தமிழீழம் மற்றும் அயோத்தி-பாபர் மசூதி பிரச்சினை வரைக்கும் தொடர்கின்றது.அவ்வளவு ஏன் நாவரசு ராக்கிங் கேசில் மாட்டிய ஜான் டேவிட்டை ஆட்டுவித்தது எது? இந்த 'நான்' என்ற வக்கிர எண்ணம் தான். இதனால் தான் ஏகப்பட்ட பிளவுகள்,சண்டை,போர்,உயிரிழப்பு,அமைதியின்மை அத்தனையும். இப்போது நம்ம பதிவுலகத்திலும் இதே தான் நடந்து கொண்டிருக்கிறது. இதைப் பற்றி எத்தனையோ பதிவுலக நண்பர்கள் எவ்வளவோ பதிவுகள் எழுதியும் இன்னும் இது ஓய்ந்தபாடில்லை. ஆனால் அதைப் பற்றி எழுதி பஞ்சாயத்து பண்ண நான் விரும்பவில்லை. ஆதலால் அதைப் பற்றி எதுவும் குறிப்பிடப் போவதில்லை. இதற்கெல்லாம் மூல காரணியான 'கருத்து வேறுபாடு' பற்றிய ஒரு சிறு அலசல் தான் இந்த இடுகை.

ஒவ்வொரு மனிதனும் அவனுக்கென்று கொள்கைகள், கோட்பாடுகள், பழக்கவழக்கங்கள், நெறிமுறை, மதம் சார்ந்த அல்லது சாராத நம்பிக்கை, என்று ஒரு தனி பாணியை வகுத்துக்கொண்டு வாழ்கின்றான். ஒரே கொள்கைகளை ஒத்த சிலர் அதன் காரணத்தாலும், அதனால் ஒருவரை ஒருவர் இலகுவாக புரிந்து கொள்வதாலும் நல்ல நண்பர்கள் ஆகின்றனர். இதற்கு நேர்மாறான கொள்கைகளை நம்பும் சிலர் எதிர் பக்கத்தில். இது வரையில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்த இருதுருவமும் பொது வாழ்க்கையில் விவாதிக்காமல் இருக்கவே,வாழவே முடியாது.

அப்புறம் வேறென்ன? கோஷ்டி மோதல் தான்.ஒரே ஒரு விஷயம் ரொம்ப சுலபமானது. அது என்னவெனில் நாம் நம்புகின்ற விஷயம் இன்னொருவருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர்களை சாடுவதும், தன் கருத்து தான் நியாயமானது என்று அவர்கள் மேல் திணிப்பதும் தான் பிரச்சினைகளுக்கான மூல காரணம். தன் தரப்பு நியாயங்களை எடுத்து சொல்லுவதில் கூட நம்மிடம் நிதானம் இல்லை.கம்யூனிசம் என்ற ஒன்று காணமல் போனதன் காரணமும் இது தான். ஏற்கனவே வரையறுக்கப் பட்ட ஒரு கொள்கையை,கருத்தை அனைவரின் மேலும் திணிக்க முயன்றது (அது மக்களின் நலனுக்கு என்ற போதும்).


சற்று யோசித்துப் பார்க்கையில், பிறந்த குழந்தையின் மனம் எவ்வளவு புனிதமானது,தூய்மையானது. அது மாசில்லாதது. அந்த மனதில் கோபம்,சஞ்சலம்,பொறாமை,ஆத்திரம்,ஏமாற்றம்,சோகம்,ஏக்கம்,மகிழ்ச்சி,வஞ்சம்,சூழ்ச்சி,பழிவாங்குதல் என்ற எதுவும் கிடையாது. அதுதான் உண்மையான நம் ஆன்மா. சொல்லப் போனால் நாம் அனைவரும் அப்படி பிறந்தவர்களே. நம் இறப்புக்கும் பின்னும் நமது நிலை அது தான். ஆனால் வாழ்கின்ற இந்த இடைப்பட்ட காலத்தில் தான் நமது மனதில் ஒவ்வொரு சூழ்நிலைகளின் போதும் எத்தனை பரிமாற்றங்கள்.அத்தனையும் அடுத்தவனை பார்த்தே வாழ்ந்து பழகிய ஆட்டு மந்தைகள் ஆனதன் விளைவே.நமது மனம் ஒரு கண்ணாடி சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தான் அது பிரதிபலிக்கும்.அதை முறையாக பிரதிபலிக்க வைக்க நம்மால் ஏன் முடிவதில்லை?


இன்னொரு விஷயம், பிரச்சினையே இல்லாத உலகத்தை சற்று கற்பனைப் பண்ணி பாருங்கள். அப்படி இருப்பின் சில நாட்களிலேயே வாழ்க்கை சலிப்படைந்து விடும். அனைவருமே ஒரே போல ஒருவருக்கு ஒருவர் XEROX காபியாக இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும்? கற்பனை செய்யும் போதே எனக்கு சலிப்பு தட்டுகின்றது.இங்கு ஒவ்வொரு மனிதனும் தனித்துவமாக இருக்கின்றான். இருக்க விரும்புகின்றான். ஆனால் அதற்காக சக மனிதனின் உணர்வுகளை மிதிக்கவும் தயாராக இருக்கிறான்.அங்கு தான் வேறுபாடு முளை விடுகின்றது.

வாழ்கை ரொம்ப சிம்பிள் சார். மனசு ஒரு வெள்ளை சுவர் மாதிரி இருக்கு. அதை ஏன் நாம் சுத்தமாக வைத்துக்கொள்ள விரும்பாமல் கசக்கி,கிழித்து,கிறுக்கி குழப்பிக் கொண்டிருக்கிறோம்?

எனவே எப்போதும் அடுத்தவர் உணர்வுக்கு மதிப்புக் கொடுத்துப் பழகுவோம். மனித நேயத்தை வளர்ப்போம்.பூவா? தலையா? முடிவை உங்களிடமே விட்டுவிடுவது தான் சரி. அதை சொல்லத் தான் இந்த இடுகையும் கூட.


பொறுமையுடன் வாசித்த அனைவருக்கும் என் நன்றி.

Apr 27, 2011

தோனி(ணி)யவை

தோனி என்ற மனிதனின் அபார உழைப்புக்கு கிடைத்த பலன் ஒட்டு மொத்த இந்தியர்களையும் மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. ஆம் இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதைப் பற்றி தான் சொல்கிறேன். ஏப்ரல் 1 தான் உலக முட்டாள்கள் தினம். ஆனால் ஏப்ரல் 2 ஆம் தேதியோ உலக கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு நமது இந்திய அணி முட்டாள்கள் தினம் ஆக்கிவிட்டது. இந்த இடுகையை நம் அணி இறுதிப்போட்டியை வென்ற அன்றே டைப் அடித்து பிறகு வெளியிட்டுக் கொள்ளலாமென ட்ராப்டில் வைத்திருந்தேன். அது வெளியிடப்படாமலேயே இத்தனை நாள் கிடப்பில் இருந்திருக்கிறது. அதை கொஞ்சம் தூசி தட்டி உங்கள் பார்வைக்கு இதோ.




நான் கங்கூலியின் ரசிகன் என்றாலும் தோனி ஆட வந்த அவரது ஆரம்ப காலத்திலிருந்தே அவரது ரசிகனும் கூட. 90 களில் சச்சின் அவுட் ஆன உடனே மேற்கொண்டு ஆட்டத்தைப் பார்க்க முடியாது என்று நாங்கள் கிரிக்கெட் விளையாட கிளம்பிவிடுவோம். எப்படியும் ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் மீண்டும் பார்க்க வரும் போது ஜடேஜாவோ, காம்ப்ளியோ சில சமயம் விளாசுவார்கள்."அடிச்சா அப்படி ஆடணும் டா " என்று எங்கள் அன்றைய அதிரடி மன்னர்களாக விளங்கியவர்கள் ஜடேஜாவும், காம்ப்ளியும்.

பிறகு சேவாக்கின் அறிமுகம், அவர் பாணி அலாதி பாணி. கிடைக்கின்ற கேப்புகளில் பாரபட்சமே இல்லாமல் பவுலருக்கு கிரீஸ் தடவி விடுவார்.அவர் அவுட் ஆன உடனேயே, அதுவும் டிராவிட் வந்துவிட்டார் என்றாலும் மேற்கொண்டு ஆட்டத்தைப் பார்க்க முடியாது என்று நாங்கள் கிரிக்கெட் விளையாட கிளம்பிவிடுவோம். டிராவிட்டும் அவுட் ஆகிவிட்டால், முன்பெல்லாம் ஆட்டம் அம்பேல். மிடில் ஆர்டர் என்பது பேருக்கே இருந்தது.

அது தவிர எத்தனையோ விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மான்கள் அலசி தேடி சலித்து ஓய்ந்திருந்த வேளையில் திராவிட்டே சில காலம் விக்கெட் கீப்பிங்கும் பார்த்துக் கொள்ள பிறகு யுவராஜ் சிங். கைப் போன்றோர் வருகையால் தான் இந்திய அணியின் மிடில் ஆர்டரே மீண்டும் புத்துயிர் பெற்றது. சில நாள் கழித்தே தோனி என்ற வீரர் விக்கெட் கீபிங் பேட்ஸ்மானாக உள்ளே வந்தார்.அவருடைய அதிரடி ஆட்டமானது சேவாக்கை காட்டிலும் கொடூரமானது.

கிரிக்கெட் புத்தகத்தில் உள்ளபடி மட்டை சுழற்றாமல் காட்டுத் தனமாக ஆடி எதிரணியை கலங்கடித்தது நமக்கு மிகவும் பரிச்சயம். அப்போது அதிரடிக்கு பேர் போன டோனி நாளடைவில் பக்குவமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தத் தொடங்கினார்.

அதிலிருந்து ஆரம்பித்தது தான் கீழே உள்ள சில வீண் கேள்விகள்.

(1) "தோனி எப்பவுமே அணி நல்ல நிலைமைல இருக்கும் போதே களம் இறங்குகிறார். துவக்கம் சரியாக இல்லாத ஆட்டங்களில் அவர் ஒன் டவுன் இறங்குவதில்லை. துவக்கம் நன்றாக இருப்பின் மட்டுமே ஒன் டவுனோ, இல்லை செகண்ட் டவுனோ இறங்குகிறார்"

இறங்கினாலும் பிரச்சினை. இறந்காட்டாலும் பிரச்சினை தான். அணியில் காம்பிர்,சேவாக்,சச்சின்,யுவராஜ் என்று நான்கு சீனியர் பேட்ஸ்மான்கள் இருக்கும் போது முன் இறங்கினால் அவர்களை தோனி ஓரங்கட்டுகிறான் என்பது. அவர்களுக்கு அடுத்து இறங்கினால் எப்படியும் யாரவது ஒருவர் அடித்து அணியின் ஸ்கோரை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்திருப்பார்கள். அதை இன்னும் சற்று கூட்ட எதுவாக இருக்கும் என்ற ஐடியா தான்.கடந்த உலகக்கோப்பை இறுதியில் கூட அனைத்து கிரிக்கெட் ஜாம்பவான்களின் "சேம் ஓல்ட் ஷிட் " போன்ற எண்ணங்களை யுவராஜுக்கு முன்பு தான் இறங்கி ஜெயிக்க வைத்ததன் மூலம் வாயடைக்க வைப்பது தான் தோனியின் பாணி. நன்றாக கவனியுங்கள், மும்பை ஆடுகளம் அதுவும் பகலிரவு ஆட்டம், டியூ பாக்டர்,ஸ்லோ அவுட் பீல்ட், ரன் சேசிங், உலகக்கோப்பை இறுதி ஆட்டம் இத்தனை மன அழுத்தம் இருக்கும் வேளையிலும் ஸ்லோ அவுட் பீல்ட் என்பதால் ஓட்டங்களை ஒன்று,இரண்டு என்று மாங்கு மாங்கென்று ஓடி வெற்றிபெற வைத்தது அவரிடம் உள்ள லக்கா?

(2) "தோனிக்கு செம இலக்கு டா" என்று நம்மைப் போன்ற ஆசாமிகள் சொன்னாலும் கூட பரவாயில்லை. கிரிக்கெட் வர்ணனையாளர்களே "ஹீ ஹாஸ் எ கோல்டன் மிடாஸ் டச்" என்று பிதற்றுவது தான் உச்சமே.

நம்ம ஆளுங்க தான் எளிதில் உணர்ச்சி வசப்படுறவங்க ஆச்சே. சாய்பாபா லிங்கம் வரவெச்சா மந்திர சக்தி. ட்வென்டி ட்வென்டி பைனல்ல கடைசி ஓவர் ஜோகிந்தர் ஷர்மாவுக்கு
கொடுத்தும், அதில் ஸ்ரீசாந்த் கேட்ச் பிடித்தும் இந்தியா ஜெயித்தால் அது லக். இதுல அல்டிமேட் காமெடி என்னன்னா எனக்குத் தெரிந்து நாத்திகம்,பெரியாரிசம் பேசும் பல நண்பர்களே இன்னும் இந்த லக் மேட்டரை பிதற்றுவது தான்.நன்றாக கவனியுங்கள், மும்பை ஆடுகளம் அதுவும் பகலிரவு ஆட்டம், டியூ பாக்டர்,ஸ்லோ அவுட் பீல்ட், ரன் சேசிங், உலகக்கோப்பை இறுதி ஆட்டம் இத்தனை மன அழுத்தம் இருக்கும் வேளையிலும் ஸ்லோ அவுட் பீல்ட் என்பதால் ஓட்டங்களை ஒன்று,இரண்டு என்று மாங்கு மாங்கென்று ஓடி வெற்றிபெற வைத்தது அவரிடம் உள்ள லக்கா?

(3) தோனி தனது ஆட்ட உத்தியை பழைய படி அதிரடியாக மாற்றிக்கொள்ள வேண்டும்

இதற்கும் தோனியின் பதில் உலகக்கோப்பை இறுதி இன்னிங்க்ஸ் தான். எல்லாப் போட்டியிலுமே அடித்து ஆடிவிட முடியாது. ஆட்டப்போக்கை கணித்து அதற்கு ஏற்ற மாதிரி ஆடினால் தான் அணியின் வெற்றிக்கு அது பயன்படும் என்பதே காரணம். கங்கூலி உட்பட அனைவரது கருத்துக்களையும் புறந்தள்ளி அன்று எப்படி செயல்படுத்த வேண்டுமோ அதை செவ்வனே செய்வது தான் தோனியின் வெற்றியின் ரகசியம். மற்ற படி எந்த மாய மந்திரமோ, மந்திரத் தகடோ இல்லை.

ஒவ்வொரு முறையும் இந்தியா ஜெயிக்கும் போதும் கூட, தோனியை பற்றி எனது பல நண்பர்கள் கமென்ட் அடிக்கும் போதும் விஜய் படத்தை ரிலீஸ் நாள் அன்று பார்த்துவிட்டு என்ன சொல்வது என்று நொந்து போய் வரும் ரசிகன் போல இருக்க வேண்டியதாகி இருந்தது.இப்போது அவர்கள் அடித்த கமெண்ட்களுக்கு இப்போது பதில் சொல்ல நான் ரெடி. ஆனால் பாவம் அவர்கள் தான் கேள்வி கேட்க இப்போது தயாராக இல்லை.

ஒன்று மட்டும் நிச்சயம், ஜெயித்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும், தோற்றால் கல் எரியும் மீடியாக்களையும்,ஆட்களையும் இவர் என்றும் கண்டு கொள்ளப் போவதில்லை.அதே வெற்றியின் களிப்பு தலைக்கனத்தையும், தோல்வியின் கசப்பு மனவேதனையும் இவரை அண்ட வாய்ப்பே இல்லை.

Apr 26, 2011

அக்னி சாட்சி

பெட்டிக்கடைக்காரன் தரும் சில்லறைகளை
சில நேரம் அமுக்கி கொள்வதில்…
எதிர் வீட்டு பெண் தண்ணீர் பிடிக்கையில்
மறைந்திருந்து அவள் மார்பங்கங்களை பார்ப்பதில்…
உன் கடிதம் கொடுக்கும் போது மட்டும்
தபால் காரன் தலை சொரிவதில்…
கடற்கரை காதல் ஜோடிகளின்
சில்மிஷத்தைகாணும் சுண்டல் சிறுவர்கள்…
என யாருக்கு தான் இல்லை
இது போன்ற சில்லறை சபலங்கள்…
இத்தனை சாட்சிகள் இருந்தும்
இவை போதாது என்று
எவனையோ மணக்க போகிறாயாம் நீ
இன்று அக்னி சாட்சியாய்…
சிரிப்பு தான் வருகிறததடி எனக்கு…

காதல் வளையம்

நேர் கோட்டின்
இறுதியில்
இரு புள்ளிகள் போல் நாம்…
நம்மை காதல் எனும்
வளையம் வந்து
இணைப்பது தான்
எப்போது?
ஆமாம்!
மிகக் கொடியது தான்
இந்த காதல் கண்ணாடி…
பின் என் சொல்வது?
வாழ்க்கை பரிணாமததையே
வேறு ஒரு பரிமாணமாக
காட்டுகிறதே…

தலைப்பு வைக்க தெரியலை

பல நாள் திருடன்
ஒரு நாள் அகப்படு வானாம்…
நானும் பல நாள்
செய்து பார்த்து விட்டேன்
அக படவே இல்லை
என் காதல்…
ஒரு வேளை
கள்ளத்தனமாக
காதல்செய்திருப்பின்
பலித்து இருக்குமோ…

கற்றது தமிழ் பெற்றது காதல்

காதல் தமிழ் கற்றேன்
காதலால் தமிழ் கற்றேன்…
உன் பெயர் சொல்ல வந்து
சொல்ல முடியாமல்
மென்று விழுங்கிய தருணம்
நான் பெயரெச்சம் கற்றேன்…

உன்னை பின்தொடர்ந்து வரும்போது
நீ முறைத்தவுடன் திடீரென
திரும்பி கொள்ளும் தருணம்
சொற்பொருள் பின்வருநிலை அணி கற்றேன்…
நீ முறைப்பாதாக காட்டினாலும்
திரும்பி நின்று வெட்கத்துடன்சிரிக்கும் தருணம்
தான்எனக்கு முரண் தொடை விளங்கியது…
உனக்கு கவிதை எழுதும்போது
உவமை அணியையும் -
உன் கருமையான கயல் விழியில்
பண்புத் தொகையும்….
உன் பெயர் சொல்வதால்
பெயர் சொல்லையும் – உன்னிடம்
காதல் சொல்ல வந்துமுடியாமல் போகும் தருணங்களில்
வினையெச்சத்தையும் கற்ற நான்
இறுதியில் இந்த காதலால்
வஞ்ச புகழ்ச்சி அணியையும்
கற்று கொண்டேன் என் காதலியே
நீ நம் காதலை மறுத்த போது…

லவ்வு ஒண்ணு ஸ்டார்ட் ஆயிடுச்சு

சகியே
நான் உன்
அருகேவருகையில்…
படிக்காமல் புத்தகத்தை
புரட்டும் காற்றை போல்
பார்த்தும் பார்க்காமல்
செல்கிறாய் நீ…
கரைக்கு வந்தும்
காதல் சொல்லாமல்
சோக கடலுக்கு
மீண்டும் திரும்பும்
அலை போல் நான்…
நான் எத்தனையோ
புத்தகங்களை
புரட்டி எடுத்ததுண்டு
ஆனால் என்னை
புரட்டி எடுக்கும் புத்தகம்
உன் நினைவுகள்…
அன்பே…
உன்னை நினைத்தால்
கவிதை வரும்
நம்மை நினைத்தால்
காதல் வரும்…
உன்னையும் என்னையும்
மாறி மாறி நினைக்கின்றதால்
எனக்கு கவிதை
என்றாலே காதல்…
காதல் என்றாலே கவிதை…

ஒரு வரி கவிதை
உன் பெயர் தான் என்றவனுக்கு…
நீ உன் காதலை
தராமல் போனாலும்
நீ தானடி என்றென்றும்
என் இதய சிலுவையில்
ஏசு நாதராய்…

காயம்

நமது காதல்
நமக்கு ஆக்கிவிட்டு போன
ரணங்கள் பல…
அவை என்றும்
ஏன் இன்றும்
இப்போதும் கூட
உன் நினைவுகளாய்…

கடற்கரை ஈர மணலில்
கால் சுவடுகளை
பார்க்கும்போது…

வெற்றியயை கொண்டாட
கிரிக்கெட் ஸ்டெம்ப்
உருவும் போது…

சாலையில் உள்ள
காலி டப்பாவை
பயணத்தின் போது
வண்டி சக்கரத்தில்
விளையாட்டாய்
நசுக்கும் போது…

அம்மாவுக்கு உதவியாக
இடியாப்பம் மாவு
பிழியும் போது
மனதும் பிழியப்படுகின்றது
உன் நினைவுகளால்…

இப்பொழுது சொல்
நீ ஆக்கிவிட்டு சென்றது
ரணங்கள் தானே?

ஒரு வேலை
இந்த காயங்களை ஆற்றவோ
தோன்றுகின்றன
உன் நினைவலைகள்?

முரண்

வற்றி விட்ட பிறகும்
வாரி வழங்குகிறாள் காவிரி
மணல்…

சாகவே இல்லை
சாதி சண்டையில்
சாதி…

மழை நின்ற பின்னும்
மரக்கிளையில்
தூறல் …

நீ இல்லை எனினும்
இருக்கிறது என்னுள்
காதல்…

முதலை கண்ணீர்!!!

கரையோர முதலை ஒன்று
கவிதைக்கு ஏங்கியதே
கவி பாடும் முகிலினத்தின்
உறவுக்கு வாடியதே

விண்மீன்கள் புடைசூழ
மனதுக்குள் ஏங்கியே
விண் பார்த்து விண் பார்த்து
வெண்மதியை நோக்கியதே

கார்மேக கூட்டத்தில்
இருள்சூழ்ந்த பின்னிரவில்
நிலவைத்தான் நோக்கியே
அது கவிதை பாடியதே

நள்ளிரவு ஜாமத்தில்
இளங்காற்று தூது செல்ல
மேகம் தான் தூதை
நிலவிற்கு சொல்லியதே

நேரம் தான் செல்ல செல்ல
கதிரவன் தான் உதிக்கவே
வெண்ணிலவோ பயந்து
வானை விட்டு நீங்கியதே

நீங்கியது அறியாது
விண்மீனின் முகம் பார்த்து
மனசாலே துரும்பாகி
அழுததே அது-
முதலை கண்ணீர்!!!

நன்றி

அனுதினமும்
நன்றியுடன்
காலை சுற்றி
வருகிறது நாய்…
படையல் சோற்றை
முதலில் ருசிக்கிறது
காகம்…
நன்றி கெட்ட
உலகம்…

மெர்சல்…

ஜேம்ஸ் பாண்ட்,
ஜாக்கி சான்,
வில் ஸ்மித்
இவர்கள் எல்லாம்
தமிழில் பேச வேண்டுமாம்
டப்பிங் படம்
பார்க்கும் அப்பாவுக்கு…
தமிழனாகிய
நான் மட்டும்
அனைவரிடமும்
இங்கிலீஷ் பேச வேண்டுமாம்…

தெய்வம் அன்றே கொல்லும்!

குறுக்கே போகும்
பூனையைத் திட்டிக்கொண்டே
தெருவில் நடந்தேன்…
ஐயோ!

ஒத்தை பிராமணன்
வர்றான்
‘ உள்ளே வந்து
சித்த நாழி இருந்து
தண்ணி குடிச்சுட்டு போடா ‘
என்றாள் எதிர் வீட்டு மாமி
அவள் பையனிடம்…
தெய்வம் அன்றே கொன்றது
என் மூட நம்பிக்கைகளை!

அ(ணை)னைப்பு …

கற்புக்கு பெயர் போன
கண்ணகியின் சிலைக்குப் பின்
காதலர்களின் சில்மிஷம்
திருமணத்திற்கு முன்பே…

காதல் தீ
பற்றிக் கொள்ள
அணைக்கின்றது
காதலர் ஜோடி
கண்ணகியின்
கோபத்திற்கு ஆள்பட்டு
சென்னை எரிந்தால்
அணைப்பது யாரோ ?

அதனால் தான்…
மதுரையை எரித்த
கண்ணகியின் சிலை
கடற்கரைக்கு அருகில்
சென்னையில்…
அ(ணை)னைக்க
வசதியாக இருப்பதால்…

Apr 25, 2011

கோட்டி-திரைப்பார்வை

ஒட்டுமொத்த பதிவுலகமே சாய்பாபா மரணம், கோ -விமர்சனம், தமிழக சட்டமன்ற தேர்தல் நிலவரம், ஐ.பி.எல் என்று பரபரத்துக் கொண்டிருக்கும் இந்தவேளையில் இப்பதிவுலக அன்பர்களை சற்று ஆசுவாசப்படுத்த வேண்டிய கடமையில் உள்ள இந்த டக்கால்டி, திடீரென்று நம்ம பார்ட்னரு எங்கேயோ குளு குளு கூழ் குடிக்க சென்றுவிட்டதால், மாயமாகிப் போன பார்ட்னர் பன்னிகுட்டிக்கு சமர்ப்பணம் செய்யும் நோக்கில் எழுதப்படுகிறது இந்த இடுகை.





கோட்டி-திரைப்பார்வை 

தயாரிப்பு : அஞ்சனா சினிமாஸ், ஜே.டி. சதிஷ்குமார் 
நடிகர்கள் : சிவா,பாக்யாஞ்சலி, சாய்குமார், பாலசிங், ஆர்யன், கராத்தே ராஜா,யுவராணி,சாம்ஸ் மற்றும் பலர்.
இயக்கம்: சிவா
பாடல்: சிவா,விவேகா
இசை: குரு கல்யான் 
எடிட்டிங்:பிரியன்
ஸ்டண்ட்: பையர் கார்த்திக்

இப்பவே உங்களுக்கு ஒரு விஷயம் புரிஞ்சிருக்குமே. ஆமாங்க அதே தான் தமிழ்நாட்டுக்கு பத்து பேரரசு, இருபது சிம்பு, நூறு டி.ஆர் ஒன்றாக உருவெடுத்துவிட்டது. ஆம் அதன் பெயர் தான் சிவா. மனுஷன் பாட்டு எழுதி, சண்டை போட்டு, நடிச்சு,இயக்கி அதகளம் பண்ணிருக்காரு.ஆனா உண்மைய சொல்லனும்னா லத்திகா ஹீரோ தலைவரு டாக்டரு சீனிவாசன் அளவுக்கு இவரால பிராகாசிக்க முடியல.இதுக்கே இப்படினா நம்ம கிண்டி நாயகன் பிரதாப்பை நெருங்க முடியுமா?

சரி படத்தோட கதைக்கு ?! போவோம்.

ஆடுதொட்டி என்ற ஊரில் பெரியா தாதா துளசி (ஆர்யன் - பான்பராக் ரவி). அவனின் அல்லக்கை.. அடச்சே! வலது கை சேகர் (கராத்தே ராஜா -சந்தனக்காடு வீரப்பன்). சேகரின் தங்கை பாக்யாஞ்சலி -கதாநாயகி. அரசியல் பலம், போலிஸ் பலம், ஆள்பலம் என அனைத்தும் துளசிக்கு பக்கபலமாக இருப்பதால், அவன் மேல் உள்ள முப்பத்து மூணு கேசு நிலுவையிலேயே கிடக்கிறது.

இப்படிப்பட்ட துளசியின் எதிரி ஷங்கர் (சாய்குமார்).வழக்கம் போலவே இவரு நியாய தர்மத்துக்கு கட்டுப்பட்ட நல்ல தாதா.இதே கேரக்டரை அறிந்தும் அறியாமலும் படத்துல பிரகாஷ் ராஜ் ஏற்கனவே பண்ணிட்டாரு. ஆனாலும் படத்துல பாக்குற மாதிரியான நடிப்புன்னா அது இந்த கேரக்டரோடது தான்.  ஆடுதொட்டி என்றாலே ஷங்கருக்கு பதிலா துளசி என்ற பேரு கேட்கணும் என்பது தான் அந்த வில்லனின் பாழாப்போன லட்சியம். 

இருங்க பாஸ்...நான் இன்னும் முடிக்கவே இல்ல. அதுக்குள்ளே எஸ்கேப் ஆகாதீங்க. நானும் ஒன்னும் புதுசா சொல்லப் போறது இல்ல.நீங்க நெனச்ச மாதிரி தான். வேலை வெட்டி இல்லாம சுத்துற ஊதாரி ஹீரோ.அவனை காதலிக்கும் பேக்கு ஹீரோயின் காதல் ஒருபுறம். ஷங்கர்-துளசி கோஷ்டியினருக்கு இடையே நடக்கும் மோதல் ஒருபுறமும் படத்தின் ஒரு கட்டத்தில் எப்படி இணைகிறது என்பதை வெண்திரையிலோ அல்லது வெள்ளை வேட்டியிலோ  காண்க.ஏன் என்றால் இந்த மாபெரும் திரைக்காவியம் இன்னும் திரையரங்குகளில் ஓடுதான்னு (ஒட்ராங்கலான்னும்) தெரியலைங்க அதுனால தான்.

நடுவுல சாய்குமார்-யுவராணி வெச்சு ஒரு பிளாஷ்பேக் வரும். அதை யாரும் மிஸ் பண்ணிடாம பாருங்க. அதுதான் படத்தோட கதைக்கு உயிர்நாடியே.இதுக்கு மேலயும் இந்த படத்தைப் பத்தி சொல்ல என் உடம்புல தெம்பு இல்ல.
நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க. எனக்கு காது கொயன்ன்ன்....ங்குது! நான் வேணும்னா "திவ்யா மீது காதல்"ன்னு ஒரு படம் ரிலீஸ் ஆகப்போகுது, அதை பார்த்துட்டு எழுதுறேன். ஹ்ம்ம்..அட போங்கய்யா...திங்கத் தெரியாதவனுக்குதான்யா பஜ்ஜி கிடைக்குது!!!இதுக்கு விளக்கம் புரியாதவங்க, மீண்டும் ஒருமுறை கடைசி படத்தைப் பாருங்க...

Apr 22, 2011

கழிசடைக் கல்விமுறை


அனைவருக்கும் வணக்கம்!

சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பதிவுலகத்துக்கு திரும்ப முடிந்தது. இத்தனை நாள் எங்கேயோ போயிருந்தவன் திரும்பவும் வந்துட்டாண்டா என்று நீங்கள் கூறுவது எனக்கு கேட்கிறது. என்ன பண்றது...நீங்க நான் பெனாத்துறதை எல்லாம் சகிச்சிகிட்டே தான் ஆகணும்.சரி இப்போ விஷயத்துக்கு வருவோம்.

எனது தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும், தோழி அன்புடன் ஆனந்தி அவர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்!!!
அன்று ஆங்கிலேயன் காலத்தில் வகுக்கப்பட்ட 'மெக்காலே' கல்விமுறையை, அவர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று அறுபத்து மூன்று வருடங்கள் ஆகியும் தொடர்ந்து வருவதால் ஏற்படும் நடைமுறைப் பிரச்சினைகளைப் பற்றிய ஒரு சிறு அலசல்.



 
நாளுக்கு நாள் கழிசடையாகி வரும் நம் இந்தியக்கல்வி முறை பற்றியும் அதன் விளைவுகளைப் பற்றியும் தான் இந்த இடுகை. கல்வி என்பது என்ன? வெறும் வாக்கியத்தையும், எழுத்துக்களையும் மனனம் செய்து அதை தேர்வில் குமட்டி எடுப்பதா? சத்தியமாக இல்லவே இல்லை. கல்வி என்பது நாம் வாழும் சமூகத்துக்கும் ஒரு தனி மனிதனுக்கும் நன்றாக வாழ ஒரு சேர வசதி ஏற்படுத்திக் கொடுப்பது. "இது தான் எங்களுக்கு தெரியுமே, இப்ப என்ன கெட்டுப் போச்சு? நம்ம இளைஞர்கள் தான் பெரிய படிப்பெல்லாம் படித்து உலகம் முழுக்க கலக்கிக் கொண்டிருக்கிறார்களே, அப்புறம் என்ன?" என்று கேட்பவர்களுக்கு என் பதில் "இந்த இடுகையை முழுவதுமாக வாசிக்கவும் பிறகு யோசிக்கவும்" என்பதாகத் தான் இருக்கும்.



இந்த கல்வியின் சக்தியானது அபரிதமானது. அழியாத செல்வம் கல்வியே என்பது நமக்கு தெரியும். ஒரு கல்வி தான் ஏழையை பணக்காரனாக்குகிறது, ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு விடிவைக் கொடுக்கின்றது, உரிமையை மீட்டெடுக்க சொல்லிக் கொடுக்கின்றது,வர்ணாசிரமத்தை ஒழிக்கின்றது, இப்படி எத்தனையோ. ஆனால் இதே கல்வியால் நமக்கே தெரியாமல் ஒரு சமூக ஏற்றத் தாழ்வுகள் உண்டாகிக்கொண்டிருக்கோம் என்பதை எத்தனை பேர் உணர்ந்து இருக்கிறீர்கள்?!



பத்தாம் வகுப்பு முடித்து பதினோராம் வகுப்பு சேரும் போதே இந்த ஏற்றத் தாழ்வுகள் உருவாகப்படுகின்றது. இரண்டு மாணவனில் ஒருவன் 450 மதிப்பெண்ணும் மற்றொருவன் 280 மதிப்பெண்ணும் பத்தாம் வகுப்பில் எடுத்திருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். ௪௫௦ மதிப்பெண் எடுத்த எந்த மாணவனும் இப்போது இருக்கும் சூழ்நிலையில் காமெர்ஸ் அல்லது வரலாறு அல்லது அக்ரி க்ரூப் எடுப்பதில்லை. பெற்றோராலும், இந்த சமூகத்தின் நிர்பந்தத்தினாலுமே அவன் அப்போது முதல் க்ரூப் எடுக்கிறான். சொந்த விருப்பு/வெறுப்பு என்பதே சமூக உட்கட்டமைப்புகளால் அவனுக்கு ஏற்படுகின்றன. கம்ப்யுட்டர் க்ரூப் எடுத்தால் இஞ்சினியராகி அமெரிக்க சென்று காசு பார்க்கலாம் என்ற எண்ணமே அவனிடம்.அவனிடம் உள்ள எளிதில் கிரகிக்கும் சக்தியை வைத்து கம்யுட்டர் பாடத்தை மனனம் செய்து கார்பரேட் நிறுவன கொத்தடிமை ஆவதே அவனது லட்சியம். இந்த மாணவனால் இந்திய நாட்டுக்கு என்ன பயன்?



மற்றொரு பக்கம் 250 மார்க் எடுத்த மாணவன் கம்ப்யுட்டர் மேல் அதீத ஈடுபாடு, புதிதாக அதில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருப்பினும் செகண்ட் க்ரூப் அல்லது தேர்ட் க்ரூப் எடுக்க நிர்பந்திக்கப் படுகிறான்.ஆக இங்கேயே ஏற்றத் தாழ்வுகள் உருவாகிவிட்டது.


அப்படியே செகண்ட் க்ரூப் அல்லது தேர்ட் க்ரூப் எடுத்து படிக்கும் மாணவனுக்கு அந்த துறையிலேயே வேலை கிடைக்கிறதா அல்லது குறைந்த பட்சம் கல்லூரியிலாவது இடம் கிடைக்கிறதா என்றால் இல்லை. ஆம் எனது நெருங்கிய நண்பன் ஒருவன் பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், பன்னிரண்டாம் வகுப்பில் அக்ரி க்ரூப் தேர்வு செய்தான், தேர்வு செய்ய வைத்தார்கள் என்பதே உண்மை. பின்பு விவசாயத்திலும், விவசயாதுக்கான அறிவியல் முறைகளும் அவனை ஈர்த்தன. எப்படியாவது வேளாண் கல்லூரியில் சேர்ந்துவிடுவது என்று லட்சியத்துடன் படித்தான்.பன்னிரண்டாம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண் எடுத்தான். ஆனால் அவனுக்கு வேளாண் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. அங்கும் பணமே ஜெயித்தது. பிறகு சம்பதமே இல்லாமல் கலைக்கல்லூரியில் பி.எ ஆங்கிலம் பயின்றான். பின்னர் கல்லூரியில் ஆசிரியாராக வேலைப் பார்த்துக்கொண்டே எம்.எ, எம்.பில் என்று இப்போது பி.எச்.டியும் முடித்துவிட்டான். இன்றும் தான் பட்ட கஷ்டங்களை எல்லாம் அவன் மாணவர்களிடம் எடுத்து சொல்லி, மாணவர்களை அவர்களின் போக்கில் விட்டு சிறந்த முறையில் கல்வி போதித்து வருகிறான்.




இப்போது சொல்லுங்கள் என் நண்பன் செய்த பிழை என்ன? சமூகத்தால் திரும்ப திரும்ப விரட்டி அடிக்கப் பட்டும் கிடைத்த துறையில் சிறந்து விளங்கும் அவன் திறமையில் எனக்கு சந்தேகமே இல்லை.



ஒரு மாணவன் தான் விரும்பிய பாடத்தைப் படிக்க மதிப்பெண்ணோ, சாதி இட ஒதுக்கீடோ, இல்லை பணமோ குறுக்கே நிற்பதால் என்னென்ன விளைவுகள் ஏற்படப்போகின்றது என்று சிந்தித்துப் பார்த்தோமா?



அரசின் ஜாதி ஒதுக்கீடுக்கான கல்வி இடங்களில் எவ்வளவு இடங்கள் உண்மையிலுமே கஷ்டப்படும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் என்று கூறப்படுபவர்களுக்கு சென்று சேர்கின்றது. என்னைக் கேட்டால் ஜாதி அடிப்படையில் கல்விக்கான இடங்களை ஒதுக்குவதை விட, ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலையை வைத்து கல்வி சலுகைகளை வழங்குவதே இன்றைய காலத்தில் சரியாக இருக்கும். ஏனெனில் அனைத்து பிரிவிலுமே வசதியானவர்களும் இருக்கிறார்கள், ஏழ்மையானவர்களும் இருக்கிறார்கள். சலுகை என்பது இல்லாதவர்களுக்கு போக வேண்டுமா இல்லை இருப்பவர்களுக்கே மீண்டும் போய் சேர வேண்டுமா?



"இல்லை என்போர் இருக்கையிலே
 இருப்பவர்கள் இல்லை என்பார்
 மடி நிறைய பொருளிருக்கும்
 மனம் நிறைய இருளிருக்கும்"

 என்ற பாடல் தான் ஞாபகத்துக்கு வருகின்றது.


அரசின் சலுகைகளை பயன்படுத்தி குடும்பத்தின் ஒரு தலைமுறை நல்ல நிலைமைக்கு வந்துவிட்டாலும் கூட திரும்ப திரும்ப ஜாதியின் பெயரால் அதே சலுகைகளை தொடர்ந்து பயன்படுத்தும் குறுகிய மனப்பான்மை என்று ஒழியும். நம்மால் நமது குழந்தைகளை படிக்க வைக்க முடியும் அதற்கான வசதியிருக்கிறது என்று தெரிந்தும் அதை உண்மையிலே கஷ்டப்படும் அவர் பிரிவை சார்ந்த இன்னொருவரின் குழந்தைக்கு விட்டுத் தர மனம் ஏன் மறுக்கின்றது? இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை இருக்கிறதா நம்மிடம்.


நமது நாட்டுக்கு இன்னொரு அச்சுறுத்தப் போகும் விஷயம் உணவுப் பற்றாக்குறை. இப்போது போதிய அளவு உணவு இருப்பினும் கூட அதை சேமித்து வைக்கும் கிடங்கு இல்லாததால்தான் விலைவாசி ஏற்றம் ஏற்படுகின்றது.


அனைவருமே பணம் சம்பாதிக்கும் நோக்குடன் கம்ப்யூட்டரையும், மேனேஜ்மேன்ட்டையும் படித்து வெளிநாடு சென்றுவிட்டால், நம் நாட்டுக்கு யார் தான் சேவை செய்யப்போகிறோம்? ராணுவத்துக்கு கூட அப்போது ஆள் இல்லாத நிலை ஏற்படும். 2020 இல் வல்லரசு ஆனாலும் கூட, இருக்கும் விவாசாயிகள் பஞ்சத்தில் சாவதாலும், விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் ஆக்கிரமிப்புகளாலும், விவசாயம் செய்ய இளைய சமூகம் முன் வராததாலும் உணவுக்காக மற்ற நாடுகளிடம் கையேந்தி இன்றைய அமெரிக்காவைப் போல டின்களில் அடைக்கப்பட்ட,பதப்படுத்தப்பட்ட வெளிநாட்டு இறக்குமதி உணவுகளை உண்டு வாழும் அவலம் என்பது மட்டும் நிச்சயம்.


நாமாக முன் வராத பட்சத்தில், வீட்டுக்கொரு ஆண்மகன் விவசாயத்திலோ அல்லது ராணுவத்திலோ கண்டிப்பாக பணியாற்ற வேண்டும் என்று சட்டம் பிறப்பிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.

Apr 8, 2011

இவண்


"என்ன மச்சி ஊருக்கா? கலக்குற டா..ஊருக்கு போயி என்னடா பண்ண போற...நீ எப்ப வருவன்னு யாருக்கும் பாசம் எல்லாம் கெடையாது...நீ என்ன வாங்கிட்டு வருவன்னு தான் எல்லாரும் இருப்பாங்க...விட்டத்துக்கு மேலே சோத்தைப் போட்டா ஆயிரம் காக்கா மச்சி...எப்ப தான் நீங்க எல்லாம் திருந்தப் போறீங்களோ? தவுசண்ட் பெரியார் வந்தாலும் கஷ்டம் டா " என்ற படி அறையில் நுழைந்தான் ராம்.

"ஆமா மச்சி! போன தடவை ஊருக்கு போயிருந்தேன்ல..அப்ப ஒரு பொண்ணு செட் ஆகிடுச்சு....ஆனா நிச்சயம் பண்ணல. நடக்காதுன்னு தான் நானும் நெனச்சேன். ஆனா பொண்ணுக்கும் என்னை பிடிச்சுடுச்சாம்! இனிமே தான் நிச்சயதார்த்தம் கல்யாணம் எல்லாமே! மூணு வாரத்துக்குள்ள முடிச்சாகணும்.என்ன நடக்கப் போகுதோ?" கவலையுடன் முடித்தான் ரகு.

"கவலைப் படாத மச்சி! ஆண்டவன்னு ஒருத்தன்...ஹ்ம்ம்...ஆண்டவனை விடு... உன் நல்ல மனசுக்கு கண்டிப்பா எல்லாம் நல்லபடியா நடக்கும் மச்சி. ஆனா நான்சென்ஸ் நீ இந்த விஷயத்த எப்படிடா எங்க கிட்ட மறைக்கலாம்? டேய் எல்லாருக்கும் பொது மாத்து போடா ஒரு சான்ஸ் கெடச்சிருக்கு... அடிபொலி பொட்டிக்கடிக!!!" என்று ராம் சொன்னவுடன் போர்வையைப் போத்தி அடிதடியுடன் அமர்க்களம் ஆரம்பித்தது.

"மாப்ள! உன்னை விட நாங்க எல்லாம் சந்தோஷமா இருக்கோம் டா. நம்ம ரூம்ல உனக்கு தான் பர்ஸ்ட் கல்யாணம் ஆகப்போகுது..கொண்டாடியே ஆகணும்..வால் மார்ட்ல வாங்குன பீர் கேச ஓபன் பண்ணிடலாம் ..." என்றான் ராம்.


"டேய் தண்ணி வண்டி.. எப்படி இருந்தாலும் டெய்லி குடிச்சிட்டு தான் இருக்க...உனக்கு இன்னிக்கு ஒரு சாக்கு கெடைச்சுடுச்சு...நீ நடத்து" என்றனர் ராமின் அறைவாசிகள்.

"அட யாருப்பா காந்தியும், ஜீசசும் பேசற மாதிரி தெரியுது...டேய் தகப்பன்களா...டெய்லி குடிச்சாலும் சரக்கு தான்...வாரத்துக்கு ஒருக்கா குடிச்சாலும் சரக்கு தான்...முடிஞ்சா நீங்களும் குடிங்க...இல்ல மூடிட்டு போங்க டா...நான் ஆரம்பிக்கிறேன்" என்று கணக்கை தொடங்கினான் ராம்.


ரெண்டு பாட்டில் பீர் முடிந்த நிலையில் மார்ல்பரோ தம் பற்றவைக்க பால்கனி வந்தான் ராம். தம் பற்றி ஒரு இழு இழுத்தவுடன் காதை கிழிக்கும் படி சத்தத்துடன் அவன் வீட்டுக்கு மேலே ஒரு விமானம் பறந்து சென்றது.அதையே வெறித்துப் பார்த்தவாறு இருந்தவனைக் கண்ட ரகு,

"என்ன மாப்ள? ரொம்ப பீலிங்க்ஸ் ஆயிடுச்சு போல...ப்ளேனையே வெறிச்சு பாக்குற?எதோ விட்டம் காக்கா என்றெல்லாம் பழமொழி பேசுன? ரெண்டு பீர் போட்டவுடனே ஆளே மாறிட்ட?"

"நம்மால என்ன மச்சி பண்ண முடியும்? அன்னா ஹசாரே ஆக இருந்தாலும் அனுஷ்காவா இருந்தாலும் நம்மால பேஸ் புக்லயும், வெப் சைட்டுளையும் லைக் பட்டனையும், வோட் பட்டனையும் தான் க்ளிக் பண்ண முடியும். நமக்கு வோட்டுரிமை கூட கிடையாது...ப்ளாக்ல தான் மேதாவித் தனமா நம்மால் பிதற்ற முடியும்..நாமெல்லாம் ஏட்டு சுரைக்காய்...சூழ்நிலை சந்தர்ப்பவாதிகள் மாப்ள... ஆமா மச்சி...எவனுக்கு தான் சொந்த ஊருக்கு போகணும்னு ஆசை இருக்காது. சூழ்நிலை மச்சி...அமெரிக்காவுல இருந்து நம்மூரு போக 1800 டாலர் ஆகுது. அடிக்கடி போய்ட்டு வர பணம் இருந்தாலும், அதை சேர்த்து வெச்சா தங்கச்சி கல்யாணத்தை இன்னும் சிறப்பா செய்யலாம்ல...அப்பன் ஆத்தாளுக்கு சொந்தமா வீடு கட்டணும்...அதுக்கு எதோ வகைல இந்த ஒரு லட்சம் யூஸ் ஆகும்ல..."


"அப்புறம் ஏண்டா அப்படி வெறிச்சு பாத்துட்டு நிக்குற? மனசுல ஊருக்குப் போகணும் தோனிச்னுன்னா கெளம்பி உடனே போயிடனும் டா..குழப்பிக்கக் கூடாது"


"நான் குழம்பலை டா...நான் இப்போ ஊருக்குப் போனாலும், இப்ப தாண்டா போன அதுக்குள்ள வந்துட்ட! தங்கச்சி கல்யாணம் இருக்கு பா..உன் பெரியப்பா பையன் சூரி இல்ல அவன் பெங்களூர்ல சொந்தமா வீடு வாங்கிட்டாண்டா..இப்படி தான் பேசுவாங்களே தவிர, நீ நல்லா இருக்கியா பா..பிரயாணம் நல்லா இருந்துச்சான்னு எல்லாம் நம்ம அப்பன் ஆத்தாளே கேக்க மாட்டாங்க மச்சி...இதெல்லாம் மிடில் கிளாஸ்ல பொறந்தவனுக்கு தான் தெரியும்...அத விடு" என்ற ராமின் கண்களில் சிறு துளி எட்டிப் பார்க்க,


"மாப்ள உனக்கு போதை ஏறிடுச்சு டா..நீ சாப்ட்டு போயி படு...தேவை இல்லாம குழப்பிக்காத..." என்று சமாளித்தான் ரகு...

"இல்ல மச்சி..நான் ஏன் தெரியுமா அந்த பிளேனை அப்படி பார்த்தேன்? என்னை மாதிரி மனநிலமைல இருக்குற அட்லீஸ்ட் ஒருத்தன் சந்தோஷமா எல்லாக் கடமையும் முடிச்சுட்டு திருப்தியா அதுல போயிட்டு இருப்பான்ல...அவனை நெனைச்சுட்டே அப்படியே சந்தோஷமா அவனுக்காக எனக்கே தெரியாமல் நம்மை ஆடிப் படிக்கிற ஒரு சக்திகிட்ட வேண்டிகிட்டு இருந்தேன். அதுக்குள்ளே நீ வந்துட்ட..." என்று தம்மை அணைத்து விட்டு அடுத்த பீர் பாட்டிலை ஓபன் பண்ணினான் ராம்.

"அப்புறம் ஏண்டா முன்னாடி காகா கதை எல்லாம் சொல்லிட்டு திரிஞ்ச?"

"என்ன மாப்ள பண்றது? நமக்குள்ளேயே ஒரு வெறுப்பை உண்டு பண்ணிக்கிட்டா தான் அந்த எண்ணத்தை கொஞ்சமாவது ஒத்திப் போட முடியுது. அதான்..." என்றான் ராம்.


அடுத்த நாள் காலை அலுவலகத்தில், "என்ன மாப்ள உன் ரூம் மேட் ரகுவுக்கு கல்யாணமாமே?! ஊருக்குப் போறான் போல..." என்றான் அவனுடன் பணிபுரியும் விஜய்.

"அவனெல்லாம் ஊருக்கு போயி என்னடா பண்ண போறான்? அவன் எப்ப வருவன்னு யாருக்கும் பாசம் எல்லாம் கெடையாது...அவன் என்ன வாங்கிட்டு வருவான்னு தான் எல்லாரும் இருப்பாங்க...விட்டத்துக்கு மேலே சோத்தைப் போட்டா ஆயிரம் காக்கா மச்சி...எப்ப தான் இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் திருந்தப் போறீங்களோ? தவுசண்ட் பெரியார் வந்தாலும் கஷ்டம் டா " என்றபடி குடித்து முடித்த மார்ல்பரோ சிகரெட்டை கீழே போட்டு வெறியுடன் தன் காலால் நசுக்கியபடி தனது இருக்கையை நோக்கி விரைந்தான்.


"சரியான சைக்கோ டா...இவன்கிட்ட போயி கேட்டேன் பாரு? " என்று ராமை மனதுக்குள் திட்டியபடி அவன் செல்வதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் விஜய்.

Apr 6, 2011

தன் கூட்டணியே தனக்கு ஆப்பு!

வணக்கம் நண்பர்களே!

ஒட்டு மொத்த பதிவுலகமும் தமிழக சட்டமன்ற தேர்தல் அரசியல் கூத்துகள் பற்றிய இடுகைகளை எழுதியாகிவிட்டது. இன்னும் தேர்தல் நாளுக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் இது வரை நடந்த அரசியல் கூத்துகள் பற்றிய ஒரு கண்ணோட்டம்.




இந்த தேர்தல் கூத்துகளை பற்றி பார்க்கும் முன்னே சற்று தமிழக அரசியல் வரலாற்றுப் பெட்டகத்தை திறந்து பாப்போம். இது அரசியல்வாதிகளைப் பற்றிய கும்மி அல்ல. எந்தெந்த வருடம் தேர்தல் நடந்தது?, யார்-யார் முதல்வர் ஆனார்கள்? போன்ற தகவல்கள் மட்டுமே. (நன்றி-விக்கிபீடியா)



மதராஸ் ஸ்டேட் 1950 ஆம் வருடம் நாம் குடியரசு ஆன நாள் உருவாக்கப் பட்டது. 1968 இல் தான் மதராஸ் ஸ்டேட் தமிழ்நாடு மாநிலமாக உருவானது. கீழுள்ள அட்டவணையில் இதுவரை நடந்த தேர்தல் வருடம் மற்றும் முதல்வர் விவரங்களைக் காணுங்கள். இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் தமிழக முதல் சட்டமன்ற தேர்தல் நடந்த 1952 இல் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாததால் அதற்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் வசமே மீண்டும் ஆட்சி ஒப்படைக்கப் பட்டது.



எனவே இப்போது வரும் தேர்தல், தமிழகத்துக்கு 14 -வது சட்டமன்ற தேர்தல் ஆகும்.

இனி வரப்போகும் 14 -வது சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதும், கூட்டணி அமைக்கும் போதும் நடந்த கோமாளித் தனங்கள் சுருக்கமாக உங்கள் வாசிப்புக்கு. ஒரு புறம் அதிமுக முதலில் தனது கூட்டணி சுமுகமாக அமைத்துக் கொண்டது போல இருந்தாலும், வைகோ என்ற தோழமைக் கட்சி தலைவர் ஓரங்கட்டப்பட்டது, சமீபத்தில் கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டதைக் கண்ட அவர் அதைத் தொடர்ந்து கம்யுனிஸ்ட் மற்றும் தேமுதிக வுடன் கூட்டணி அமைக்க முயன்று கூட்டணி அமைப்பதிலேயே தோற்றது, பின்னர் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று அறிவித்தது இவை யாவும் நீங்கள் அறிந்ததே.




பொதுவாக பார்த்தோமேயானால் அதிமுக மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் அந்த சமயத்தில் புத்திசாலித்தனமானதே. ஆம்! வைகோ என்ற மனிதர் நல்ல அரசியல்வாதி தான். ஆனால் அவருக்கு தற்போதைய நிலையில் விஜயகாந்த் அளவுக்கு ஓட்டு வங்கி கிடையாது என்பதை யாரும் மறுக்க முடியாது.






தவிர மதிமுக வின் கடந்த தேர்தல் ஓட்டு எண்ணிக்கையையே அதற்கு சான்று. எனக்கு தெரிந்த வரையில் வைகோ மற்றும் நாஞ்சில் சம்பத் என்ற இருவரே மதிமுக கட்சியில் மக்களுக்கு நன்கு தெரிந்த முகங்கள். நல்ல மேடைப் பேச்சாளர்களும் கூட. தேமுதிகவில் விஜயகாந்த் என்ற ஒருவரை தான் மக்களுக்கு தெரியும். விஜயகாந்த் என்ற தனி மனிதனின் முயசியால் மட்டுமே அவருக்கு கிடைத்த வாக்கு எண்ணிக்கை இவ்வளவு வருடம் அரசியல் பணியாற்றிய வைகோவுக்கு கிடைக்கவில்லை. இதை அறிந்தும் அவர் தனது சுய கவுரவத்துக்காக அதிக தொகுதிகளை கேட்பது கூட்டணியின் வெற்றிக்கு பாதகமானது என்று அதிமுக நன்கு கணித்தது. என்னுடைய கருத்து வைக்கோ தற்போது எடுத்த முடிவே சரியானது. தேர்தலை புறக்கணித்து விட்டார். மேலும் அவர் அதிக தொகுதிகள் கேட்பதில் பிடிவாதம் காட்டிய காரணம் கவுரவத்துக்காக மட்டும் அல்ல. அதிக தொகுதி கிடைக்காததால் தான் நிற்கலாம் என்றிருந்த நிலையில் ஏமாற்றமடைந்த பதவி வெறி பிடித்த, பதவி ஆசை கொண்ட தொண்டர்களின் வலியுறுத்தலும் ஒரு காரணமே.



ஆனால் அதிமுகவின் இன்றைய நிலையோ மிகவும் பரிதாபகரமானது. எங்கேயோ போன ஓணானை எடுத்து வேட்டிக்குள்ள விட்டுகிட்ட கதை தான். விஜயகாந்த் சமீபத்தில் "அடித்த-அடித்துவிட்டு அடித்த " லூட்டிகளே அதற்கு காரணம். சன் டிவியும் அவர் பேசிய பேச்சுக்களை?! முழுவதுமாக ஒளிபரப்பாமல், ஏனோதானோவென்று சில விஷயங்களை திரித்துக் கூறுவது அப்பட்டமாகத் தெரிகிறது. இதில் ஸ்பெஷல் சவுண்ட் எபக்ட்ஸ் வேறு. மாற்று சக்தியாக வருவீர்கள் என்று நினைத்த அண்ணன் விஜயகாந்திடம் ஒரே ஒரு கோரிக்கை. தேர்தல் முடியும் வரை இரவில் மட்டும் அதுவும் பிரச்சாரம் முடிந்தவுடன் சரக்கு அடியுங்கள்.
 
மற்றொரு புறம் திமுக கட்சிக்கு ஆரம்பமே அடி சறுக்கியது. காங்கிரஸ் கேட்ட தொகுதிகளை ஒதுக்கமுடியாது என்று தவுலத் காட்டிய தலைவர் பின் வேறு வழி இல்லாமல் மீண்டும் காங்கிரஸ் காலிலேயே விழுந்தார். 63 நாயன்மார்களை உருவாக்கினார். பின்னர் ராமதாஸ், திருமாவளவன் என்று ஒரு எவர் கிரீன் கூட்டணி ரெடி. ஊரே கை கொட்டி சிரித்தது. அப்புறமென்ன தடுமாற்றங்கள் குறைந்த நிலையில் அடுத்த தாக்குதல் தான். மக்களின் கவனத்தை திசை திருப்ப திமுக கதாநாயகி தேர்தல் அறிக்கை, விஜயகாந்தை தாக்க சொல்லி வடிவேலுவை பணியவைத்து சன் டிவியின் உதவியுடன் செய்திகளில் காமெடி செய்வது என வழக்கம் போலவே தனது தேர்தல் நேர நாடகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார்.




கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் அரை மணி நேர சன் டிவி செய்தியில் கலைஞர், ஸ்டாலின் பேசுவதை விட வடிவேலு பிரச்சார பேச்சு கால் மணி நேரம் ஒலிபரப்பப்படுகிறது. அத்தனையும் மக்களுக்கு செம பொழுதுபோக்கு. விஜயகாந்த் பற்றி தான் செய்தியே. ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்தோ, வேறு செய்திகளோ கண்டிப்பாக கிடையாது. நடுநிலை செய்தி எனக் காட்டிக்கொள்ள ஜெ.ஜெ அங்கு பிரசாரம் செய்தார் அதை பேசினார் என்று இறுதியில் இரண்டு வரிகளோடு சரி.



இதெல்லாம் போதாதென்று வடிவேலுவை ஒரு பெரிய ஆளாக நினைத்து சிங்கமுத்துவை கொக்கரிக்க செய்துள்ளனர் எதிர்க்கட்சியினர். இது வரையிலும் அதிமுக கட்சியின் மேல் மரியாதை இருப்பினும் கூட்டணி கட்சிகளின் நடத்தைகளால் தோற்கும் அபாயம் கவலை அளிக்கிறது.



எனவே வரலாறு காணாத வகையில் இந்த தேர்தலில் எந்த கட்சி தோற்றாலும் அது எதிர் கட்சியினால் அல்ல, மாறாக தங்கள் கூட்டணி கட்சிகளான முறையே தேமுதிக- காங்கிரஸ் மூலமே என்பது மட்டும் உறுதி. அது எந்த கட்சி என்பதைக் காண ஆவலாய் நானும் உங்களுடன்.

வெளில போற ஓணானை வேட்டியில் விட்டுட்டு

வோனான் வோனானா உட்டுடுமா?

Apr 5, 2011

தந்தீ.....ஈஈஈஈஈஈ...ரா!

வி.எ.எம் ஸ்டூடியோ பிள்ளையார் கோவில் வாசலில் கூட்டம் ஏகத்துக்கு கூடியிருந்தது. பின்னே மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அகிலஉலக அசத்தல் நாயகனின் அடுத்த படமாச்சே! படபூஜைக்கு பல முக்கிய தலைகள் பங்கேற்க வந்திருந்தனர்.தவிர கமெர்ஷியலுக்கு பெயர் போன பிரபல இயக்குனர் வேற. பெரிய பட்ஜெட் படம்- அகில உலக ஸ்டார் விமலகாந்த் - உலக அழகி பட்டம் வென்ற ஜில் ஜில் ரமாமணி ஹீரோயின் - ஆஸ்கார் விருதைப் பெற்ற கமானின் இசை- ரன் பிக்சர்சின் விளம்பர உக்தி, தாராள சக்தி. அதனால் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருந்தது.



அய்யர் மந்திரம் சொல்ல, அகிலஉலக ஸ்டாரும், ஜில்லும் நெருங்கி உரசியபடி நின்று கொண்டிருந்தவாறே கற்பூர தீபத்தை எடுத்து தத்தம் கண்களில் ஒற்றிக் கொள்ள, படத்தின் தயாரிப்பாளர் அகிலஉலகத்துக்கு மலர்மாலையை பொன்மாலையாக அணிவிக்க அந்த இடமே கோலாகல களேபரங்களில் திளைத்திருந்தது.



பரபரப்பை மேலும் தீவிரமாக்கி காசு பார்க்கும் முயற்சியில் மீடியாக்கள் வேறு. இந்த பூஜையின் ஒட்டுமொத்த ஓளிபரப்பு உரிமை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ரன் பிக்சர்சின் தொலைக்காட்சியான ரன் டி.வி க்கு கொடுக்கப்பட, என்ன செய்வது என்று தெரியாமல் மற்ற ஒருபுறம் மற்ற தொலைக்காட்சிகள் தடுமாறிக் கொண்டிருக்க, பிணகரன் செய்தித் தாளுக்கு மட்டும் ஸ்டில்களை கொடுக்குமாறு பி.ஆர்.ஒ அகில உலகத்துக்கு கட்டளையிட மற்ற பத்திரிக்கை நிருபர்களும் கொதிக்கத் தொடங்கினார்கள்.



இதைத் தொடர்ந்து ரன் டி.விக்கு படத்தின் இயக்குனர் பங்கர் அளித்த பேட்டியில், "இது வரைக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் பார்க்காத விஷயங்கள் படத்தில் இருக்கும். அகில உலக ஸ்டாரை இவ்ளோ இளமையாய் அழகாய் அவரது ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். ஷூட்டிங் இதுவரைக்கும் யாருமே போகாத லொகேஷனில் தான் இடம்பெறும். மொத்தத்தில் தமிழ் சினிமாவில் இது ஒரு வித்தியாசமான முயற்சி. எனவே அனைவரும் திருட்டு வி.சி.டி யில் இந்த படத்தை பார்க்காதீர்கள்.தியேட்டரில் போய் பாருங்க..நன்றி வணக்கம்!" என்று முடித்தார்.



பூஜை முடிந்ததும் ஜில்லும், அகில உலகமும் ஒரே காரில் ஏற கார் உண்மையான பூஜையை நிறைவேற்ற நோக்கிப் புறப்பட்டது.

இயக்குனர் பங்கர் தனது பங்காளிகளுடன் இப்போது பாட்டிலுடன் பாண்டிச்சேரியில். "யோவ்! இப்போ இருக்குறவன் மட்டும் இல்லாம புதுசா வர்றவன் கூட எல்லா ஹாலிவுட்,உலக படத்துல வர நல்ல சீன்களை எல்லாம் சுட்டுடுரானுங்க. இப்போ நான் என்னய்யா பண்றது. கதைக்கு எங்க போவேன். தவுளத்தா தமிழ் சினிமாவின் புதிய முயற்சி..அது இதுன்னு பேசிட்டேன். ஏதாவது யோசனை சொல்லுங்கப்பா" என்று தனது பங்காளிகளிடம் புலம்பினார் பங்கர்.



"சார்! எனக்கு தெரிஞ்ச சி.டி கடை ஒன்னு இருக்கு. ஒனர் என் பிரெண்டு தான். ஒ.கே ன்னா இப்போவே போயி பல பேரு பார்க்காத நல்ல நல்ல உலக படங்களையும், அப்படியே நம்ம போதைக்கு ஊறுகாயாக சில கில்மா படங்களையும் அள்ளிட்டு வந்துடுறேன்.நம்ம போதைக்கு மட்டுமில்லாம, நம்ம படத்துக்கும் ரொமான்ஸ் காட்சிகளுக்கு இந்த கில்மா படங்கள் உதவும் சார்." என்றார் பங்கரின் பங்காளிகளில் ஒரு புத்திசாலி பங்காளி.



இப்படியே பாடலாசிரியர், கேமராமென், ஸ்டன்ட் மாஸ்டர் என ஒவ்வொருவரும் தத்தம் திறமையை சி.டிக்கள் மூலம் சொந்தமாக யோசித்து எல்லாம் கலந்த பிச்சைக்காரனின் தட்டைப் போல படம் சுவையாக வந்திருப்பதைக் கண்டு தங்கள் உழைப்பில் புல்லரித்துப் போய் இருந்தனர்.படமும் வெளியானது. ப்ரோமோ காட்சிகளில் அனைவரும் படத்தைப் பாராட்ட, மீண்டும் படக்குழுவினர் "இப்படி கஷ்டப்பட்டு நாங்கள் உழைத்து எடுத்த இந்த படத்தை தியேட்டரில் போய் பாருங்க...திருட்டு வி.சி.டியில் பார்க்காதீங்க. எங்க உழைப்பை சுரண்டி யாரோ பிழைக்கறாங்க." என்று ஒரே விஷயத்தை பலவாறு பேசிக்கொண்டிருந்தார்கள்.



படம் அனைத்து நகர பிரதான திரையரங்குகளிலும் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மொத்தம் 10000 பிரிண்ட்டுகள் போடப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையை தட்டி சென்றது. பாலபிஷேகம், பீர் அபிஷேகம் என தியேட்டர்கள் அமர்க்களப்பட 5000 , 10000 என முதல் நாள் முதல் ஷோவுக்கு டிக்கெட் வாங்கி ரசிகர்கள் கண்டு களித்தனர். ஒரு வாரத்துக்கு ஊரெங்கும் இதே பேச்சு தான்.ஐந்து நிமிட இடைவெளியில் "தந்தீ.....ஈஈஈஈஈஈ...ரா!" என்று படத்தின் விளம்பரம் ரன் டி.வியில். முன்பு பூஜை போடும் போது தங்களுக்கு ஸ்டில் மற்றும் செய்தி தராததை மனதில் கொண்டு மற்ற சில பத்திரிக்கைகள் படத்தைப் பார்த்து "குப்பை. இந்த காட்சி அந்த படத்தில் வந்தது. அந்த காட்சி இந்த உலகப் படத்தில் ஏற்கனவே டோகோமோ சுசுகி எடுத்துவிட்டார்" என்றெல்லாம் விமர்சனம் எழுதிய கிழித்துக் கொண்டிருக்க... ரன் டிவி மட்டும் இந்த படத்தின் வெற்றிகரமான 50 நாளை 30 வது நாளிலேயே கொண்டாடிக் கொண்டிருந்தது. ரசிகர்கள் போதையில் திளைத்திருக்க, நடிகர்களும், தயாரிப்பாளர்களும் பணத்தில் திளைத்திருக்க, வயிற்றெரிச்சலில் இருந்த ஏனைய பத்திரிக்கைகள் இந்த படம் பல படங்களில் தழுவல் என்று செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தது. பட விமர்சனம் எழுதிய விமர்சகர் பர்மா பஜாரில் அடுத்த பட விமர்சனம் எழுத அது தொடர்பான சி.டிக்களை வாங்க பேரம் பேசிக் கொண்டிருந்தார்.



அடுத்த நாள் காலை, "திருட்டு வி.சி.டி புழக்கத்தை தமிழக அரசு தனது சட்டக் கரங்களால் ஒடுக்கி விட்டது" என தமிழக முதல்வருக்கு நடிகர் சங்கம் பாராட்டு விழா நடத்தும் செய்தி 23 -செப்- 2050 அன்று ஒரு இதழில் வெளியாகியிருந்தது.