Aug 5, 2011

கார்ப்பரேட் கறவைமாடுகள் (தொடர்ச்சி)

கார்ப்பரேட் கறவைமாடுகள் (தொடர்ச்சி)

வணக்கம் நண்பர்களே! சென்ற பாகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் நவீன கொத்தடிமைகள் பற்றிய கட்டுரையின் தொடர்ச்சி இது. சென்ற இடுகையை படிக்க இங்கே சொடுக்கவும்.



நமது நாட்டில் எவ்வளவோ சங்கங்கள், அமைப்புகள். ஜாதியில் ஆரம்பிச்சு பேதி போனா அதை அள்ளும் தொழில் செய்பவர்கள் வரைக்கும் தங்களுக்கென்று தனித் தனியாக சங்கம் வைத்து தனது உரிமைகளை நிலை நாட்டவும், பெற்றுக்கொள்ளவும், குறைந்த பட்சம் உரிமைக்காக குரல் கொடுக்கவேணும் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆட்டோ ஓட்டுனர்கள் முதல் சினிமா நடிகர்கள் வரை சங்கங்களின் வீச்சு கிளை விட்டு பரவி இருக்கிறது.

ஒவ்வொரு தொழிலாளியும் தனது உழைப்புக்கு ஏற்ற மரியாதையும், ஊதியத்தையும் பெறுவதற்கு இந்த சங்கங்களின் மூலம் போராடுகிறான். இந்த தொழிலாளர் சங்கங்கள் தான் பெரிய பெரிய பணமுதலை முதலாளிகளிடம் இருந்து ஒவ்வொரு தொழிலாளியையும் சிறிதளவேனும் காத்து வருகின்றது.

ஒவ்வொரு தொழிலாளியும் சங்கத்தில் இணைந்து இன்னொரு தொழிலாளியின் பிரச்சினைக்கு குரல் கொடுக்கிறான். இப்படிப்பட்ட சங்கங்கள் இல்லாத போது தான் கொத்தடிமைத்தனம், முதலாளித்துவம் போன்ற கண்ட கருமாந்திரங்கள் எல்லாம் உருவாகிறது. ஆனால் நம்மில் பலரோ சங்கம் என்றாலே கேலிக்கூத்தாக பார்க்கிறோம். அதுசரி நாம்தான் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளாமல் வீட்டுக்குள்ளே செருப்பு போட்டு நடக்கின்ற ஆட்கள் ஆயிற்றே. தனக்கென்று ஒரு பிரச்சினை வரும்வரை நாம் கண்ணை மூடிக் கொண்டிருப்போம். கண் கெட்ட பிறகு ஆச்சார அனுஷ்டானத்துடன் சூரிய நமஸ்காரம் பண்ணும் அறிவாளிகள்...

இந்த நாட்டில் மிகப் பெரிய எண்ணிக்கையில் வேலை ஆட்களைக் கொண்டு செயல் படும் இரண்டே துறைகளுக்கு தான் சங்கங்கள் இல்லை. ஒன்று காவல் துறை. இன்னொன்று ஐ.டி துறை. நமது இயலாமை பயன்படுத்தி நமது உழைப்பை சுரண்டி தொந்தி பெருக்கும் கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகள், காக்கா கடி கடித்து தூக்கி வீசும் எச்சில் பருக்கைகளை ஊதியமாக பெற்றுக் கொள்வதில் தான் நமக்கு எவ்வளவு சந்தோஷம்.

இப்போது ஒரு உண்மை சம்பவம். வேலை முடித்து தனது அலுவலகத்திலிருந்து டூ-வீலரில் தனது நண்பருடன் பயணிக்கிறான் ஒரு ஐ.டி கம்பெனி வாலிபன். மெயின் ரோடுக்கு அந்த பக்கம் செல்ல சாலையை கடக்க எத்தனிக்கையில் ரோட் மீடியனில் சுமோவில் வந்த குடிகார பொறுக்கி கும்பல் அவர்கள் மேல் மோதுகிறது. இதை தட்டிகேட்ட தனது நண்பனுக்கு அடி விழுவதை பார்த்து அதனை தடுக்க அந்த இளைஞன் நினைப்பதற்குள் அவன் பைக்கையும் சேர்த்து அடித்து நொறுக்கிவிட்டு  காது கூசும் அளவுக்கு கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்து விட்டு கிளம்புகிறது அந்த கும்பல். பத்து நிமிடம் நடந்த அடிதடியில் உடை முழுவது கிழிந்து குருதி வழிந்தோட நசுங்கிய டூ-வீலரை எடுக்க முடியாமல் தடுமாறும் இவர்களுக்கு உதவி செய்ய அவ்வளவு நேரம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்த ஒருவன் கூட வரவில்லை.

இது போன்ற இன்னொரு சம்பவம். அலுவலகத்திலிருந்து கிளம்பி ஒரு அந்திமாலை நேரம், அருகில் இருக்கும் டாஸ்மாக் சென்று மது அருந்திக் கொண்டிருக்கிறான் இருபத்தெட்டு வயது மதிக்கத்தக்க 'ஜாவா சுந்தரேசன்' போல தோற்றம் கொண்ட ஒருவன். தனது அலுவலக டென்ஷன்களை தற்காலிகமாக மெதுவாக மறந்து கொண்டிருந்த அவனுக்கு அன்று நேர்ந்தது அவன் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாததாக இருந்திருக்கும். ஆம், அதே டாஸ்மாக் பாரில் அவன் அருகில் குடித்துக் கொண்டிருந்த 'நான் மகான் அல்ல' படத்தில் வரும் கும்பலை போலிருந்த நான்கு பேர் ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் பேச்சு அப்படியே தகாத வார்த்தைகளில் தொடர்ந்து அவர்களின் ஆத்தாளையும், செத்துப்போன முப்பாத்தாளையும் இழுக்க வெறி கொண்ட ஒருவன் குடித்துக்கொண்டிருந்த பீர் பாட்டிலை எடுத்து திட்டியவன் மண்டையில் உடைக்க, நான்கு பேருக்குள்ளும் கை கலப்பு தொடங்கியது. சிறிது நேரம் பாருக்குள்ளேயே ஒருவரை ஒருவர் துரத்தி அடித்துக்கொண்ட பின் அவர்களில் ஒருவனது கண் நம்ம ஜாவா சுந்தரேசன் மேல் பட இனி நடந்ததை உங்களுக்கு சொல்லி தான் தெரிவிக்க வேண்டுமா?

அதில் உச்சம் என்னவெனில், ஏதோவொரு டீல் அறுந்த பிகருக்காக அதுவரை அடித்துக்கொண்ட அவர்கள், "மச்சான் நம்ம பிரச்சினைக்கு காரணமே இவன மாதிரி ஆளுங்க தாண்டா...ங்கோ$# #&! அடிங்கடா அவன..." என்று ஜாவா சுந்தரேசன் தலையும் பதம் பார்த்து, துரத்தி துரத்தி அடித்தது தான்.

என்னடா வடிவேலு ஒரு படத்தில் "குஜராத்துல இப்படி தான் ஒரு சம்பவம் நடந்தது" என்று சொல்லுவது போல எவனுக்கோ நேர்ந்த சம்பவங்களை சொல்கிறானே... ஒருவேளை இது டக்கால்டிக்கு தான் நடந்திருக்குமோ? என்று சந்தேகப்படுகிறவர்களுக்கு, எனக்கு நடந்த ஒரு சம்பவம்.

பொதுவாக நான் எல்லாம் சாதாரண அரசுப் பேருந்தில் சென்னையிலிருந்து சேலத்துக்கு 95 ரூபாய் டிக்கெட் கொடுத்து கூட்ட நெரிசலில் சீட் கிடைக்காமல் படிக்கட்டில் அமர்ந்தபடி எட்டு மணி நேரம் பயணம் செய்யும் ரகம். எப்படியும் ஒவ்வொரு வார இறுதியும் ஊருக்கு செல்லும் போதெல்லாம் இதே கதி தான். எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளில் என்னைபோன்ற பல பங்காளிகள் சென்னைக்கு அடிஎடுக்கத் தொடங்கியதன் விளைவு, நான் அமர்ந்து செல்லும் படிக்கட்டுக்கும் பங்கம் விளைவிக்க, எனது டூ-வீலரிலேயே ஏழு மணிநேர பயணத்தில் சேலத்துக்கும்-சென்னைக்கும் அலைந்து திரிந்த காலம் அது. வெள்ளி இரவு ஏழு அல்லது எட்டு மணிக்குப் புறப்பட்டால் உளுந்தூர்பேட்டையில் பத்து மணிக்கு இரவு உணவு முடித்து பத்தரை மணிக்கு கள்ளக்குறிச்சி-ஆத்தூர் வழியாக சேலம் செல்ல இரண்டு மணியாகிவிடும். நீங்கள் யாரேனும் கள்ளக்குறிச்சி, ஆத்தூர், சேலம் ரோட்டில் இரவு நேரத்தில் தனியாக பயணித்திருந்தால் அது எவ்வளவு ஆபத்து நிறைந்தது, கஷ்டமானது என்று உங்களுக்கு புரியும். அதுவும் சாலைப் பனி நடந்து கொண்டிருப்பதால் எழும்பும் தூசி உங்கள் கண்களை, கோபமடைந்த விஜயகாந்த் கண் போல மாற்றிவிடும் வல்லமை கொண்டது. இரவு நேரமாதலால் கண்ணாடியும் அணிந்து கொண்டு செல்ல முடியாது.

அப்படிப்பட்ட ஒரு பயணத்தில் தான்  கள்ளக்குறிச்சிக்கு   முன் காட்டுக்கோட்டை என்ற இடத்தில் திடீரென்று முளைத்த ஒரு சோதனை சாவடியில், தன் கடமையிலிருந்து வழுவாத இரண்டு போலீஸ் அங்கிள்ஸ் என்னை வண்டியை நிறுத்தி வழி மறிக்க, நான் கொண்டு சென்ற பையில், துவைக்க எடுத்து சென்ற எனது அழுக்கு துணிகளை மட்டும் கண்ட அவர்கள் கடுப்பாகி, "டி.டி யா பண்ற?" என்று கேட்க, டி.டி நான் விஜய் டி.வி ல பொண்ணு தான...அதை நான் என்ன பண்ணேன்? என்று நான் முழிக்க, "பாரு இவன் பார்வையே சரி இல்ல...கண்ணை பாருயா எப்படி செவந்து இருக்கு...கண்டிப்பா டி.டி தான்... செக் பண்ணா தெரியும்...வாயை ஊதுடா" என்று சொன்னவுடன் தான் டி.டி என்றால் ட்ரங்கன் டிரைவ் என்பதே என் மரமண்டைக்கு புரிந்தது.

கண நேரத்தில் என் பைக் சாவியை புடுங்கிக்கொண்டு, சார்ஜ் சீட்டும் கையுமாக என்னை மிரட்டினார்கள். நானும் எவ்வளவோ கெஞ்ச, அவர்கள் "வண்டியை சீஸ் பண்ணுயா...கள்ளகுறிச்சி கோர்ட்ல வந்து ரெண்டாயிரம் பைன் கட்டிட்டு வந்து வண்டிய எடுத்துக்கோ" என்றனர். நானும் நடு இரவில், நடுக்காட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க,

"யோவ் புரிஞ்சுக்கோ...நடு ராத்திரி தனியா பைக்ல போற...எங்கயாவது போயி நீ விழுந்தா நாங்க தான் அலையணும்...எங்க வேலை பாக்குற?"
"சாப்ட்வேர் கம்பெனில சார்"
"அதான..அப்ப காசுக்கு பஞ்சம் இருக்காது இல்ல"
"அப்படியெல்லாம் இல்ல சார்"
"என்ன நொப்பிடி இல்ல...தம்பி காசு எப்ப வேணும்னாலும் சம்பாதிச்சுக்கலாம்...ஆனா உசுரு போனா சம்பாதிக்க முடியாது..."
'சரி எவ்ளோ வெச்சுருக்க...இவ்ளோ தானா? என்னய்யா சாப்ட்வேர் கம்பெனில வேலை பாக்குறன்னு சொன்ன..இவ்ளோ தான் வெச்சுருக்க? நடிக்கறியா? "
"இல்ல சார் இவ்ளோ தான் சார் இருக்கு. பக்கத்துல ATM கூட எதுவும் இல்ல சார். இப்ப என்னால இவ்ளோ தான் கொடுக்கம் முடியும்"
"சரி..போற வழியில ATM இருக்கும், அங்க போயி பணத்தை எடுத்துக்கோ, ஒழுங்கா பார்த்துப்போ..சாவுக்ராக்கி"
"சரிங்க சார்"
இப்படி நடந்து முடிந்த உரையாடலில் என்னிடம் இருந்த இருநூறு ரூபாய்களை சம்பாதித்துக் கொண்டு என்னை வழி அனுப்பி வைத்தனர்.

(தொடரும்...)

7 comments:

Unknown said...

மாப்ள நீ சொல்றது கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்குய்யா.....உண்மைல இப்படி கஷ்டப்பட்டு உழைக்கும் உம்மை போன்றவர்கள் இருக்கும் போதும்....கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு டீவில ஐடி கமபனில இருந்து வேலையிலிருந்து தூக்கப்பட்ட சிலரோட பேட்டி போட்டு இருந்தாங்க....அதுல ஒருத்தர் தன்னோட கஷ்டட்டத்த சொல்லி வரத்தப்பட வைத்தார்...அதே நேரத்துல இன்னொருத்தர் தனக்கு கார் வீடு எல்லாம் அனுபவிச்சதய்யும்(கடன்ல!)...அதுவும் பக்கத்துல இருக்க கடைக்கு கூட கார்ல போயிட்டு இருந்ததையும் சொல்லி இருந்தாரு...எல்லாம் போனதை அழாத குறையா சொன்னார்....அந்த நிகழ்ச்சிய பாக்குற மன்சப்பய மனசுக்கு அந்த கஷ்டப்பட்ட மனுசன மறந்திருக்கும்.....இப்படி பந்தா பண்ண பையனைத்தான் நினைவிருக்கும்......இதை போன்ற விஷயங்களால தான் மக்கள் கிட்ட ஐடி நண்பர்களை பற்றி தவறான அபிப்பிராயம் இருக்குன்னு நெனைக்கிறேன்.....தவறு இருந்தால் மன்னிக்கவும்!

MANO நாஞ்சில் மனோ said...

கஷ்ட்டமாதான்ய்யா இருக்கு......!

செங்கோவி said...

உண்மை சுடும்!

சக்தி கல்வி மையம் said...

வறுத்த மாகத்தான் இருக்கு..

சக்தி கல்வி மையம் said...

வறுத்த மாகத்தான் இருக்கு..

சேலம் தேவா said...

//எனது டூ-வீலரிலேயே ஏழு மணிநேர பயணத்தில் சேலத்துக்கும்-சென்னைக்கும் அலைந்து திரிந்த காலம் அது. //

இப்பவும் இந்த மாதிரி பயணம் செய்வதாக இருந்தால் தயவுசெய்து நிறுத்திவிடுங்கள் நண்பரே..!!ஆபத்தான வேகத்தில் வாகனங்கள் செல்லும் சாலை அது.4 வழிப்பாதை வந்தவுடன் இன்னும் வேகமாக செல்கிறார்கள்.இதுபோன்ற லஞ்சம் வாங்கும் காவல்துறையினரை பல படங்களில் கிண்டல் செய்தும் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை.இதைப்போன்ற அனுபவம் அனைவருக்கும் ஒரு தடவையாவது கிடைக்கச்செய்கிறார்கள் நமது காவல்துறையினர். :(

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

too bad