வணக்கம் நண்பர்களே! சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் நான் ரசித்த சில கதாப்பாத்திரங்களும், அதைப்போலவே வாழ்ந்து கொண்டிருக்கும் நான் கண்ட சில மனிதர்களைப் பற்றிய இடுகை இது.
(1) "அவன்-இவன்" ஐனஸ்- இந்த கேரக்டரில் நடித்த குமார் போன்ற அச்சு அசல் உருவமும், அதே போல குசும்பும், வயதானாலும் அதற்கு சம்பந்தமே இல்லாத துள்ளலும், தன் மகனிடம் தனது காதல் கதைகளையும் தனது மகன் சைட் அடித்துக்கொண்டிருக்கும் பிகரை பற்றியும் வெளிப்படையாக பேசும் ஒரு கேரக்டர் தான் என் நண்பன் ஒருவனின் தந்தை. வீட்டுக்குளேயே தனது மனைவி, குழந்தைகள் முன்னாடி தண்ணி போடுவதில் இருந்து, மகனிடம் காசு கொடுத்து சிசர்ஸ் சிகரெட் வாங்கி வரச்சொல்லி அதை கெத்தாக புகைவிடுவது வரை அச்சு அசல் ஐனஸே தான்.இந்த குணாதிசயங்கள் கூட மாறிவிடக்கூடியவை. ஆனால் அந்த கேரக்டரை படத்தில் பார்க்கும் போது திரையில் என்னால் என் நண்பனின் அப்பாவை மிக எளிதாக உருவகப்படுத்திக்கொள்ள செய்தது இருந்த சொத்துக்களை எல்லாம் தனது வெகுளித்தனத்தால் இழந்த பின்னும் அந்த மனிதனது வாழ்க்கை முறையில் கொஞ்சம் கூட குறையாத உற்சாகம் தான். இந்த கேரக்டரைப் பற்றியும், படத்தைப் பற்றியும் நிறைய முரணான கருத்துக்களும், விமர்சனங்களும் வந்திருந்தாலும் நான் ரசித்தேன். ஆனால் ரசித்தது ஐனசை இல்லை, என் நண்பன் கமல் அப்பா உமல் பாய் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை தான்.
(2) "ஆரண்ய காண்டம்" காளையன்- இதுவும் ஒரு வாழ்ந்து கெட்ட ஜமீன் கேரக்டரே. ஆனால் இந்த கேரக்டரை படத்தில் பார்க்கும் போது என் மனதுக்குள் தோன்றியது என்னவோ என் அப்பா தான். அதுவும் தனது மகனிடம் "நீயும் அப்படி சொல்லாதடா!" என்று அழுது கொண்டே தன் மகனை தேற்றும் காட்சி அருமை. அதுவும் அந்த சின்ன பையன் தன் அப்பனின் பொறுப்பின்மையையும், கையாலாகாத்தனத்தையும் கண்டு எரிந்து விழுவது போல பேசும் காட்சிகள் நான் என் அப்பனிடம் சிறு வயதில் பேச நினைத்தவை. அப்பன் மேல் அதீத கோபம் இருந்தாலும் பயந்துபோய் மனதுக்குள்ளேயே திட்டிக் கொள்வேன். அதுவும் இறுதியில் "உங்க அப்பான்னா உனக்கு பிடிக்குமா?" என்ற கேள்விக்கு அந்த பையனின் அசால்ட்டான உடல்மொழியுடன் கூடிய பதில் அட்டகாசம். இந்த சோமசுந்தரம்-மாஸ்டர் வசந்த் (காளையன்-கொடுக்காபுளி) மனதில் நச்சென்று ஒட்டிக்கொள்ள காரணம் அது என் சொந்த புரானாத்தை கொஞ்சம் சுரண்டிப் பார்த்ததால் எனலாம்.
(3) "அவன்-இவன்" வால்ட்டர் வணங்காமுடி- இந்த கேரக்டரை அநேகமாக நீங்களும் உங்கள் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ பார்த்திருக்கலாம், பழகி இருக்கலாம். ஆமாங்க எங்கள் பள்ளியில், நாங்கள் படித்த வகுப்பில் சூரியநாதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நண்பன் இப்படி தான் இருப்பான். உடல்மொழி, பேசும் விதம், முகத்தை கோணலாக வைத்துக்கொண்டு பழிப்பு காட்டுவது என்று இவன் செய்யும் அனைத்து சேஷ்டைகளும் பெண்கள் செய்வது போலவே இருக்கும். ஆண்கள் மட்டுமே படித்த பள்ளியில் இப்படி இருந்தால் அவனுக்கு என்ன பெயர் வைத்து அப்போது அவனை கூப்பிட்டிருப்பார்கள் என நான் சொல்லி உங்களுக்குப் புரியவேண்டியது இல்லை.அதே சூரியநாதன் இன்று பிரெஞ்சு தாடியுடன் எங்கள் ஊரில் டூ-வீலரில் கெத்தாக வலம் வருகின்றான் என்று அவனைப் பார்த்த என் நண்பர்கள் சொல்கின்றனர்.
(4) "அவன்-இவன்" கும்பிடுறேன் சாமி- இந்த கேரக்டர் யாரென்று நீங்களே கண்டுபிடித்து பின்னூட்டத்தில் சொல்லுங்கள். ஒரு சின்ன க்ளூவுக்காக இந்த காட்சி. அதிகமாக தண்ணி அடித்துவிட்டு விஷாலைப் பற்றி ஐனசிடம் "நீ நடிகன் டா..த்ரிஷா உனக்கு தாண்டா!!!ஆனா நான் இப்படி தான் உன்கூட எப்பவுமே முறைச்சிக்கிட்டே இருப்பேன்" என்று சொல்லும் போது ஆர்யா தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
(5) "ஆரண்யகாண்டம்" பசுபதி - நாம் வாழ்கையில் ஓடாத நாளே இல்லை எனலாம். பணத்துக்காகவும், நல்ல சுகமான வாழ்க்கை முறைக்காகவும், தனது குடும்பத்துக்காகவும் என இப்படி எதோ ஒன்றுக்காக நாமும் ஓடிக்கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் இதில் எத்தனை பேர் நம்மில் இலக்கை அடைகிறோம்? இந்த ஓட்டத்தின் போது நான் பலமுறை நிதானித்து சிந்தித்து பார்ப்பதுண்டு. இந்த காரியத்தை எதுக்கு பண்றோம்? ஏன் பண்றோம்? இதனால் வரப்போகும் பிரச்சினையை எப்படி சமாளிக்கலாம்? என்று. இந்த படத்திலும் திரும்பிய பக்கமெல்லாம் (பசுபதி) சம்பத்தை துரத்த, அவர் ஓடிக்கொண்டே ஒவ்வொரு சிக்கலையும் தீர்க்க ஊகிக்கும் காட்சி அம்சம்.
இதே போல இன்னும் சில கேரக்டர்களுடன் மீண்டும் வருகிறேன்.பொறுமையுடன் வாசித்த அனைவருக்கும் நன்றி!!!