Dec 13, 2010

நான் நானாகிறேன்

அளவளாவிய சாதனைகள்
செய்வதில்
விருப்பமில்லை எனக்கு...

ஏனெனில்..
குறுகிய காலத்திலேயே
சாதனை முறியடிக்கப்படும்
சாத்தியம் இருப்பதால்...

நான் நானாகிறேன்...
நானாகவே இருக்கிறேன்...


என் மனம் ஆசைப்படும்
அனைத்தையும்
முடிந்தவரை இன்றே
செய்துவிடுகிறேன் ...
இறந்த பின்
நிராசையானவைகளை அடைய
ஆவியாய் அலைவதைவிட
இது எவ்வளவோ மேல் என்று...

நான் நானாகிறேன்...
நானாகவே இருக்கிறேன்...

Nov 20, 2010

ப்ரெட்டி வுமன்

ப்ரெட்டி வுமன் …

நான் சமீபத்தில் மிகவும் ரசித்த திரைப்படம். பொதுவாக நான் ஆங்கிலப் படங்கள் மற்றும் பிற மொழிப்படங்கள் பார்ப்பது இல்லீங்க. மொழிப் பிரச்சினை மற்றும் ஆர்வம் இல்லாததும் காரணம். மேலும்

எனக்கு பாண்டஸி வகை படங்கள் என்றால் இப்போதெல்லாம் சுத்தமாகப் பிடிப்பதில்லை. சிறு வயதில் ரசித்த பல பாண்டஸி படங்கள் இப்போது
பார்க்கும் போது ஒன்று அலுப்படைய செய்கிறது இல்லை இதையா அப்படி ரசித்தோம் என்று சிரிப்படைய செய்கிறது.

சில நாட்களுக்கு முன் நள்ளிரவு தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றிக் கொண்டிருக்கும் போது தான் எதேச்சையாக ஸ்டார் மூவிஸில் இந்த படத்தை பார்க்க நேரிட்டது. ஜூலியா ராபர்ட்ஸ் வரும் ஒரு அஜால் குஜால் சீனில் தான் நான் சேனல் மாற்றுவதையே நிறுத்தினேன். ஆனால் பின்பு தொடர்ந்து வந்த காட்சிகள் என்னுள் உண்டான காமத்தை செயலிழக்க செய்ததோடு இல்லாமல் நல்ல படத்தை பார்த்த திருப்தியை தந்து விட்டது. இத்தனை நாள் இந்த படத்தை பார்க்காமல் விட்டு விட்டோமே என்றும் எண்ணத்தோன்றியது.


1990 இல் வந்த ரொமாண்டிக் காமெடி படம் என்று விக்கிபீடியா கூறினாலும் என்னைப் பொறுத்த வரை இது ஒரு மிகச்சிறந்த பீல் குட் மூவி ஆகும். 464 மில்லியன் டாலர்களை வசூல் செய்தது இப்படம். இதில் நடித்ததற்காக ஜூலியா ராபர்ட்ஸ் கோல்டன் க்ளோப் விருதை பெற்றிருக்கிறார். இதெல்லாம் நான் படம் பார்த்த பிறகு தெரிந்து கொண்ட தகவல்கள்.

சரி அப்படியென்ன இந்த படத்தில் இருக்கிறது என்று பார்ப்போம் வாருங்கள்.

படத்தின் நாயகன் ஒரு மிகப்பெரும் வியாபாரி. பெரும் பணக்காரன். நாயகியோ விபச்சாரத்தை தொழிலாக கொண்டவள்.ஹீரோ வேலை நிமித்தமாக லாஸ் ஏஞ்சல்ஸ் வரும்போது நாயகியை சந்திக்கிறான். பிறகு அவள் விபச்சாரி எனத் தெரிந்த பின்பு ஒரு இரவுக்கு பேரம் பேசுகிறான். இரவு முழுவதும் அவளிடம் பேசிக்கொண்டே இருக்கிறான். ஒரு கட்டத்தில் அவளோ “நீ கொடுத்த பணத்துக்கு அனுபவிச்சுடு. நேரம் குறைந்து கொண்டே போகிறது” என்கிறாள். அதற்கு நாயகன் “நீ என்னுடன் ஒரு வாரம் தங்க முடியுமா?” என்று கேட்க, நாயகி பேரம் பேச, இறுதியில் 3000 டாலர்களுக்கு ஒத்துக் கொள்கிறாள். இந்த ஒரு வாரத்தில் இருவருக்குள் நடக்கும் மன மாற்றங்கள் மற்றும் போராட்டங்கள் தான்கதையே.

ஜூலியா ராபர்ட்ஸின் நடிப்பு அபாரம். ஒரு துணி கடையில் அவரை அவமானப் படுத்தி அனுப்பும் பணிப்பெண்ணிடம் அடுத்த நாள் அதே துணிக் கடைக்கு சென்று “நீ நேற்று மிகப் பெரிய வியாபாரத்தை இழந்து விட்டாய்!” எனும் போதும், தன்னை அனைவரும் வேறு மாதிரி பார்கிறார்கள் என்று உணர்ந்து அழும் போதும் கலக்குகிறார்.

ரிச்சர்ட் கேரே தன்னுடைய அமைதியான நடிப்பால் நம்மை வசியப்படுத்தி விடுகிறார். படத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் ஹோட்டல் மேனேஜராக வருபவர் தான். படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமை. உதாரணமாக ஜூலியா ராபர்ட்ஸின் தோழி, ஹீரோவின் வக்கீலாக வருபவர் போன்றவைகள்.

இறுதியில் நாயகனும் நாயகியும் சேரும் விதம் தான் வழக்கமான காட்சியாக அமைந்து விட்டது. இப்படத்தை ஏற்கனவே பார்த்தவர்கள் நினைவுகளை அசைபோடுங்கள். இன்னும் பார்க்காதவர்கள் கண்டிப்பாக பாருங்கள்.

இன்னொரு இடுகையில் என்னைக் கவர்ந்த மற்றொரு படமான “Death at the Funeral” பற்றி எழுதுகிறேன்.

நன்றி, வணக்கம்!

விபத்தும்,மன நிலைமையும்…

உங்களுக்கு தெரிஞ்சவங்க லிஸ்ட்ல கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி யாராவது அக்சிடேன்ட்ல அடிபட்டு ரத்தக்களரியோட கிடந்துருக்காங்களா சார்?கல்யாணம்னதும் எதோ என்னோட கல்யாணம் என்று அவசரப்பட்டு நினைச்சிடாதீங்க. நமக்கு தான் இன்னும் அந்த மாதிரி விஷயம் எதுவும் நடக்கலையே. நடக்குமா என்பதும் சந்தேகமாகவே இருக்கு?


ஆமா! கல்யாணம் என் கூட பிறந்த அண்ணனுக்கு. கூட பிறந்தா எப்படி அண்ணனாகும். நீங்க ட்வின்சா? என்றெல்லாம் கடிக்க கூடாது.

ரெண்டு வாரம் முன்னாடி ஒழுங்கா வழக்கம் போல ரூம்ல தண்ணிய போட்டு படுக்காம கொழுப்பெடுத்து போயி சரக்கடிக்காம வெளியில சாப்பிட கிளம்பினேன் சார். தோசை சாப்பிட்டுவிட்டு திரும்பி வரும் வழியில் அன்பே சிவம் ரேஞ்சுக்கு இல்லனாலும் சுமாரான அளவுக்கு விபத்து நடந்துடுச்சு.

இப்ப உங்களுக்கு புரிஞ்சுருக்குமே! விபத்துக்கு காரணம் நாய். ஆமாங்க நம்புங்க தெரு நாயே தான். இத்தனைக்கும் பார்த்துகிட்டே தான் வண்டியை செலுத்தினேன். அது கிட்ட நெருங்கும் போது சராலென முன் சக்கரத்துக்குள்ள பாஞ்சிடுச்சு. நாய் மேல வண்டி ஏறி பின் பறந்து நானும் பறந்து சிமென்ட் ரோட்டில் உருண்டு விழுந்து மூன்று சுற்று முடிக்கையில் நாய் எஸ்கேப் ஆகி ஒரு மூலையில் நின்று “இவன் இன்னுமா உயிரோட இருக்கான்?” என்ற தொனியில் பார்த்து எரிகிற புண்ணில் எண்ணையை ஊற்றியது. இரண்டு கையிலும் பலத்த காயம். சில்லறை காயம் இல்லை. ஆயிரம் ருபாய் நோட்டு காயம். இடத்து காலில் ஒரு ஆயிரம் ருபாய் நோட்டு, கை விரல்கள், உள்ளங்கை, பின் கை பகுதி என பலத்த சேதம். எங்கும் ரத்தம் எதிலும் ரத்தம். அனைத்தும் சிராய்ப்பு காயமே என்றாலும் எரிச்சலோடு சேர்ந்த வலி அதுவும் அக்னி நட்சத்திரத்தில்!

உருளும் பொழுது என்னை தடுத்து நிறுத்திய ஒருவர் மட்டும் என்னிடம் நலம் விசாரிக்க, கூடியிருந்த நால்வர் நாயை கல்லால் அடித்த படி துரத்திக் கொண்டிருந்தார்கள். “அட நாயை அடிக்கிற நாய்களா முதல்ல எனக்கொரு உதவி பண்ணுங்கடா” என்று நினைக்கையிலேயே ஒருவர் “சார் இந்த நாய்னால தினமும் ரெண்டு பேராவது விழுறாங்க. சனியன் இத அடிச்சே கொல்லனும் சார்” என்று வெறிபிடித்து துரத்தஆரம்பித்தார்.

எனக்கும் வெறி இருந்தாலும் அப்போது என்னால் ஒன்னும் செய்ய முடியலீங்க. சமாளித்து எழுந்து நின்றவுடன் கையிலும் காலிலும் ரத்தம் கொட்டத் தொடங்கியது. எனக்கு உண்மையாலுமே அன்றிரவு டவுசர் கிழிந்து விட்டது. இருட்டில் உடனேயே அது தெரிய வில்லை. ஹாஸ்பிடல் சென்றவுடன் தான் டவுசர் தாறுமாறாக கிழிந்து தொங்கிகொண்டிருப்பது தெரிந்தது. நல்ல வேலை ஜட்டி போட்டிருந்தேன். இல்லை என்றால் இருந்த கொஞ்ச நஞ்ச மானமும் கப்பலேறியிருக்கும்.

சென்னையில் உதவும் மனப்பான்மையுடன் சில பேரா என்று வியக்கும் அளவுக்கு எனக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தி பின் ஒரு வேனில் என்னை ஏற்றிக்கொண்டு ஹாஸ்பிட்டலில் விட்டனர். எனது டெபிட் கார்டு மற்றும் லைசென்ஸ் மட்டும் தான் என்னிடம் இருந்தது. பாக்கெட்டில் வைத்திருந்த முன்னூற்று சொச்ச ரூபாய் எங்கே விழுந்தது என்று தெரியவில்லை.


முதலுதவி செய்து கொண்ட பின் சிகிச்சை கட்டணம் நானூறை என்னை கொண்டு சேர்த்த நண்பர் கட்டினார். பின் அவருக்கு திரும்பும் வழியில் திருப்பி செலுத்தி வண்டியை மீண்டும் நானே சமாளித்து ஒட்டிக்கொண்டு ரூம் வந்து சேர்ந்த போது மணி 11 . பிறகு தான் வீட்டுக்கே தகவல் சொன்னேன். விழுந்ததில் கைபேசி நொறுங்கியிருந்தது. டிஸ்ப்ளே காலி. குத்து மதிப்பாக வீட்டு எண்ணை அடித்ததில் சரியாக இணைப்புகிடைத்தது.

இரவு முழுவதும் தூக்கம் இல்லை. அவ்வளவு வலி. எப்போது தூங்கினேன் என்று எனக்கு நினைவில்லை.பின்னர் அடுத்த நாள் காலையில் 5 மணிக்கெல்லாம் மீண்டும் ஹாஸ்பிடல் சென்று கட்டு போட சொன்னால் மறுத்தார்கள். கட்டு போட்டால் காயம் சீக்கிரம் ஆறாது என்றார்கள். அவர்களிடம் நான் பஸ்சில் ஊருக்கு போவதால் தேவைபடுகிறது. சென்றவுடன் நீக்கி விடுவேன் என்று விளக்கிய பிறகு கட்டு போடப் பட்டது. வலியுடனும் குருட்டு தைரியம் மற்றும் வலிமையுடனும் புறப்பட்டேன் ஊருக்கு.பேருந்தில், சாலையில் என எங்கும் எண்ணை நோக்கி விசித்திர பார்வைகள். வழி நெடுகிலும் என்ன என்று கேட்பவர்களுக்கு விளக்கங்கள் என என்னை எரிச்சலடைய செய்த முதல் நாள் அது. வீட்டுக்கு சென்றால் கல்யாண அமளி துமளிகள். நிம்மதியாக உறங்க வழியே இல்லை. சரியாக கவனிக்க ஆள் இல்லை. விரக்தியின் உச்சம் சூழ்ந்த தருணங்கள். அனைவரின் மீதும் கோபம். வலி.

இதன் நடுவே திருமணத்துக்கு மீண்டும் மாயவரம் பயணம். மண்டபமே கலையாக இருக்க நான் மட்டும் பத்து நாளாக குளிக்காத அழுக்கு தேகம், தாடி சகிதமாய் ஒரு ஷார்ட்ஸ் மற்றும் பனியனுடன். இதன் நடுவே வந்து போகும் இஷ்டமித்திர பந்துகளின் விசாரிப்புகளுக்கு விளக்கவுரை. சுமார் 700 பேர் கிட்ட எப்படி விழுந்தேன்? எதனால விழுந்தேன்? சொல்ற கடுப்பு இருக்கு பாருங்க அதை அனுபவிச்சா தான் தெரியும்.


இதனால் நான் கத்துகிட்ட பாடம்:

இந்த உலகத்துல ஒருவன் தன்னை ஒழுங்காக முதல்ல பார்த்துகலைனா ரொம்ப கஷ்டம். எவனும் உதவி பண்ணுவான் நினைக்கவே கூடாது. நம்ம உடம்பை நாம தான் பத்திரமா பாத்துக்கணும். இல்லைனா என் நிலைமை தான்.

சில சுவாரசியங்கள்:

மெடிக்கல் பாரம் பில் பண்ணும் போது எனக்கு வயது 32 என்று என்னை கேட்காமல் போட்டுவிட்டார்கள். பின்னர் அவ்வளவு வலியிலும் சொல்லி அதை 26 என்று மாற்றியது.

எப்ப விழுந்தீங்க என்ற கேள்விக்கு இப்ப தான் சுட சுட விழுந்தேன் இங்க வந்திருக்கேன் என்று எம்.ஆர். ராதா சார் பாணியில நக்கல் அடிச்சது.

நான் ஊருக்கு போகும் போது மீண்டும் ஒரு நாய் பஸ்சுக்கு குறுக்கே பாய்ந்து பின்னங்கால் ஒடிந்த நிலையில் கதறி விழுந்தது.

என்ன செய்தும் ஆறாத புண் மூன்று நாள் 5 மணி நேர கேப் விட்டு விட்டு 90 கட்டிங் அடித்த பின் சீக்கிரம் ஆறியது.

ஒவ்வொருவரும் காரணம் கேட்க நான் விளக்க அவர்கள் தனது சொந்த கதையை கூற சுமார் 200 சிறுகதைகளை படித்த திருப்தி.

இது போல இந்த இரண்டு வாரத்தில் அனைத்துமே சுவாரசியங்கள். இப்போது தான் கைகளில் புண் ஆரியிருக்கிறது. தழும்புகள் மறைய ஆலிவ் ஆயில் தடவி வருகிறேன். காலில் புண்ணும் வீக்கமும் முற்றிலும் குணமாக வில்லை. இன்னும் ஒரு வாரம் ஆகும் போலிருக்கிறது.


மீண்டும் வருகிறேன்… விரைவில் மீண்டு வருகிறேன்.

Nov 19, 2010

ஓட்டம்...

என் அப்பா சிந்திய
விந்தணுக்களில் ஒன்றான
நான்...

அன்று முந்திக்கொண்டு ஓடிய ஓட்டம்
இன்று வரை ஓயவில்லை

பள்ளிப்பருவத்தில் மதிப்பெண்
கல்லூரி காலத்தில் மணப்பெண்
வாலிப காலத்தில் வேலை

என்று பணத்திற்காக
நான் ஓயாது ஓடிய ஓட்டம்...

இன்று என்னையும்
அமெரிக்காவாசி ஆக்கிவிட்டது!!!

Mar 18, 2010

மாஞ்சா

எல்லாரும் கலவை இடுகைகளுக்கு மிக்சர், கொத்து பரோட்டா, நூடில்ஸ் என்று விதம் விதமாக பேரு வெச்சிட்டாங்க.
என்னை மாதிரி புதுசா எழுத வர பதிவருங்க நிலைமை இங்க தான் சிக்கல் ஆகிடுதுங்க. சரி நாமளும் கலந்து கட்டி சில விஷயங்களை ஒரு இடுகையாக போடலாமுன்னு பார்த்த தலைப்பு என்ன கொடுக்குறதுனு தெரியல. ஹாப் பாயில்  (இது குடிச்ச்சதுக்கு அப்புறம் போடுறது), இடியாப்பம், பிரைட் ரைஸ் என்னென்னமோ யோசிச்சு அப்புறமா இந்த தலைப்பை வெக்கிறேன்.

சிறு சிறு செய்திகளை நூல் விடுராப்புல விடனும் என்பதால் "மாஞ்சா" என்று பேரு வெக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். படிச்சுட்டு நல்ல இருந்தா சொல்லுங்க.

1. ஐ.பி.எல்:

ஐ.பி.எல் மூன்றாம் ஆண்டின் போட்டிகள் தொடங்கிவிட்டன. இப்போது சில ஆட்டங்களுக்குப் பிறகு போட்டி கலை கட்டத் தொடங்கியிருக்கிறது. இருநூறு ஓட்டங்கள் எடுத்தும் தோல்வியைத் தழுவிய பஞ்சாப் அணியின் பரிதாபம், போராடி ஜெயித்த சென்னை அணி, சச்சினின் அபார ஆட்டத்தால் இருநூறை கடந்த மும்பை அணி என்று இம்முறையும் சுவாரசியத்திற்கு பஞ்சமில்லை. இதில் நேற்று மும்பை அணி அடித்த ஓட்டங்களே இதுவரை ஐ.பி.எல் மூன்றாம் சுற்றின் அதிக பட்ச ஓட்டங்களாகும். சென்னை அணி பரிதாபகரமான நிலையிலிருந்து சற்று மீண்டிருக்கிறது. இரு ஆட்டங்களிலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹய்டேன்  ஏமாற்ற தோனி மற்றும் பத்ரிநாத் "அடிவாங்க மிதிவாங்க வலிதாங்க அடி,வலி பொட்டிக் கடிக" என்ற வடிவேலின் டையலாக் போல பல காயங்களுடன் போராடி வெற்றிக்கு வித்திட்டனர். 
போன வருஷம் எல்லாரையும் விட  கலக்குன "பேக் ஐ.பி.எல் ப்ளேயர்" இந்த வருஷம் என்னங்க ஆனாரு?

சன் டி.வி இதையும் விளம்பரப்படுத்தறாங்க. விளம்பரம் இல்லாம கிரிக்கெட் பாக்க சன் டி.டி.எச் வாங்க சொல்றாங்கோ. அப்போ அதுல ஒன்லி சன் பிச்சர்ஸ் பட விளம்பரம் மட்டும் வருமா?  அதுக்கு மத்த விளம்பரங்களே பரவாயில்லைங்க, ஜூ-ஜூ விளம்பரம் பார்க்கலாம். என்ன சொல்றீங்க?

2 . தோனி எனும் போராளி:

இப்போது மக்கள் அனைவரும் கூறும் ஒருமித்த கருத்து, தோனி முன்பு போல ஆடுவதில்லை. ஆட்டம் சற்று கடின நிலையில் இருக்கும் போது இறங்காமல், அப்படியே இறங்கினாலும் அடிக்காமல் செல்கிறார். இல்லை எனில் ஆட்டம் நன்கு சென்று கொண்டிருக்கும் போது மட்டும் மூன்றாவதாக களம் இறங்குகிறார். மற்ற நேரங்களில் இல்லை என்று. இந்திய அணியில் முதல் நான்கு இடங்களில் ஆடுவதற்கு என்றே அதற்கென்று பிரசித்தி பெற்ற பேட்ஸ்மேன்கள்  இருப்பதால் தான் மூன்றாம் நிலையில் இறங்குவது மிகவும் கடினம் என்று ஏற்கனவே அவர் பெட்டி அளித்து இருக்கிறார். சில மேட்ச்சுகளில் ஓட்ட விகிதம் அதிகப்படுத்த அவர் மூன்றாம் நிலையில் இறங்க வேண்டி உள்ளது. அனைத்து மேட்சுகளிலும் மூன்றாம் நிலையில் ஆட வேண்டிய தேவை இல்லை என்ற கருத்துக்கு நான் ஒத்துப் போகிறேன். தவிர நம் இந்திய அணியின் பலவீனமே ஆடினால் அனைவரும் அடித்து நொறுக்குவார்கள் இல்லையேல் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழப்பார். இதில் தான் நாம் மற்ற முன்னணி அணிகளான ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்ரிகாவிடம் இருந்து வேறு படுகிறோம். மேட்ச் சேவர் (மைக் ஹஸ்சி,பெவன் போன்றோர் )என்று கூறப்படும் அளவுக்கு நம் அணியில் இன்னும் சொல்லிக்கொள்ளும் படி யாரும் இல்லை.

தற்போது இவரின் வழிநடத்துதல் அபாரமாக இருக்கிறது. இதற்கும் "தோனிக்கு சரியானான் லக்கு டா." என்கின்றனர் பலர். இறுதி வரை வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை மற்றும் போராடும் குணம் டோனியிடம் அதிகமாகவே இருக்கிறது. அதில் கிடைத்தது தான் அவரின் தலைமையில் நாம் பெற்ற அனைத்து வெற்றிகளும் என்பது என் கருத்து.

3 . சோத்துக்கட்சி:

நான் என்னுடைய முந்தைய இடுகையின் ஒன்றில் கூறியதை போல, என்னைப் போன்ற அன்லிமிட்டெட் மீல்ஸ் கேசுகள் செல்ல ஏதுவான இடம் வேளச்சேரி - விஜயநகர் பை-பாஸ் ரோட்டில் உள்ள "கலவறா ரெஸ்டாரன்ட்". அமைதியான சூழ்நிலை, கேரளா பாரம்பரிய உணவு வகைகள், நல்ல ருசியான மீன் கறி என்று பிராமதமான இடம். விலையும் மாடரேட்டாக தான் இருக்கும். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அங்கு வேலை பார்க்கும் பேரர் ஒருவரே ஸ்பீக்கரில் ஒலிக்கும்  கரோகேவுக்கு ஏற்றவாறு அருமையாக பாடுவார். லவ்வுரவங்களுக்கு ஏற்ற இடமும் கூட.

4 . கவுண்டமணி செத்துட்டாரு...

கடந்த மூன்று நாட்களாகவே கவுண்டமணி செத்துட்டாரு என்று புரளி கிளம்புவதும் பின் அது புரளி என்று நாம் தெரிந்து கொள்வதும் என போய்க்கொண்டிருக்கிறது. இப்படியே போனால் ஒரு வேலை சில உண்மையான நிகழ்வுகள் கூட நமக்கு அசாத்தியமாக தோன்ற வாய்ப்பிருக்கிறது. எப்படியோ தலைவர் நலமாகத் தான் இருக்கிறார் என்று ஒவ்வொரு புரளியின் முடிவில் அது புரளி தான் என ஊர்ஜிதம் ஆகும் போது மனதுக்குள் ஒரு திருப்தி.

மீண்டும் சந்திப்போம்!!!

Mar 16, 2010

தடா ...

கடந்த சனிக்கிழமை வழக்கமானதாக இல்லாமல் சென்றது. ஆம் எப்போதும் வார இறுதியில் மப்பில் மட்டையாவது வாடிக்கையாகிப் போன தருணத்தில் மனதிற்கும், உடலுக்கும் வலிமையையும், புத்துணர்வையும் கொடுக்க வல்லதாக அமைந்த தடா நீர்வீழ்ச்சி பயணம் பற்றிய கட்டுரை இது.

சென்னைக்கு வேலை நிமித்தமாக வந்து கிட்டத் தட்ட மூன்று வருடங்கள் ஆன பின்பும், இதற்கு முன் சென்னை வந்தபோதும் கூட இந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று எண்ணியபோதும் கூட இப்பொது தான் அதற்கு வாய்ப்பு கிட்டியது. ஏன் சொல்லப்போனால் வாய்ப்பை நாங்களே தான் ஏற்படுத்திக் கொண்டோம்.

நண்பர்கள் ஐந்து பேர் செல்ல திட்டமிட்டிருந்தோம்.முதலில் பைக்கிலேயே ஐவரும் சென்று விடலாம் என்ற திட்டம் அடிக்கிற வெயிலைப் பார்த்ததும் காரிலேயே செல்லலாம் என்ற மெஜாரிட்டி (ஐவரில் மூவர், என்னையும்,இன்னொருவரையும் தவிர்த்து) காரணமாக மாற்றப்பட்டது.

அதன்படி வேளச்சேரியில் இருந்து நானும், காருக்கு சொந்தக்காரரான நண்பரும் சனிக்கிழமை காலை 8 :45 மணிக்கு புறப்பட்டோம். ஈக்காடுதாங்கல் காசி தியேட்டர் அருகே ஒருவரையும், பின் வடபழனி வைட் ஹவுஸ் பார் அருகே மற்றொரு நண்பரையும் பிக் அப் செய்ய வேண்டும். எனவே நாங்கள் காசி தியேட்டர் பாலம் அடைந்தபோது 9 :15 ஆகி விட்டது. அங்கு எனது நண்பர் அவருடைய நண்பரின் கண்ணில் பட்டுவிட்டதால் அவரும் வர விருப்பப்பட நால்வர் காரிலும் அவர் பைக்கிலும் வர திட்டமிட்டோம்.

இதற்கிடையில் இன்னொரு நண்பரும் திடீரென்று வர சம்மதிக்க, ஐவர் காரிலும் இருவர் பைக்கிலும் பயணித்தோம். ஒவ்வொருவரையும் பிக் அப் செய்து கிளம்பும் போது மணி 10 :30 ஆகிவிட்டிருந்தது. மெதுவாக நகரத்தின் சாலைகளை ஊர்ந்த கார், நகர எல்லையை தாண்டியவுடன் மெல்ல மெல்ல வேகம் பிடிக்க தொடங்கியது.

சரக்கு,உணவு மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை வாங்க வேண்டும் என்று குழுமியிருந்த சில குடிமகன்கள் (என்னையும் சேர்த்து தான்) விருப்பப்பட்டதால் வண்டி புதுவாயல் அருகே இருந்த ஒரு டாஸ்மாக் அருகே நிறுத்தினோம். காலையில் சிலர் சாப்பிடாமல் இருந்ததால் அங்கேயே சாப்பிட்டுவிடலாம் என்றும் முடிவானது. சென்ற ஏழு பேரில் ஐவர் தண்ணி வண்டி ஆதலால் ஒரு புல் ஆர்.சி, குவார்ட்டர் நெப்போலியன் (இட்ஸ் மை சாய்ஸ்), ஆப் போல்ஸ் (புதிதாக வந்திருக்கும் பிராண்டி) வாங்கினோம்.

பிறகு அருகில் உள்ள ஒரு ஹோடல்லில் நான்கு பேர் சாப்பிட ஆரம்பித்தோம். அனைவரும் நான்கு இட்லி, வடை மற்றும் வடகறி சாப்பிட்டோம். பில் வெறும் 42 ரூபாய் தான். உணவு மோசம் என்றும் சொல்ல முடியாது. ஓகோ என்றும் புகழ முடியாது. இதே உணவை சென்னையில் சாப்பிட வேண்டுமானால் எப்படியும் 70 -80 ருபாய் செலவு ஆகியிருக்கும்.

பிறகு மீண்டும் பயணம் தொடர்ந்தது. கும்மிடிப்பூண்டி, பெரிய ஒபள்ளபுரம், எலவூர் வழியாக தடா சென்றடைந்தாகி விட்டது. செக் போஸ்ட் என்ற போர்டை பாத்ததும் சற்று உஷாராகி வண்டியை நிறுத்தி டிக்கியில் வைத்திருந்த சரக்கு பாட்டில்களை எடுத்து நாங்கள் அமர்ந்திருந்த இருக்கையின் கீழே உள்ள சந்துகளில் ஒளித்து வைத்து விட்டு வண்டியை ஓட்டுகின்ற நண்பரை மெதுவாக செலுத்த சொன்னோம்.

ஆனால் நாங்கள் எதிர்பார்த்தது போல செக்போஸ்ட் என்பது இல்லை. அங்கு ஒரு போலிஸ்காரர் கூட இல்லை. பல்பு வாங்கியது எங்கள் ஒவ்வொரு முகத்திலும் தெரிந்தது. தடா சென்றவுடன் அங்கு மதிய உணவுக்காக நிறுத்தி வேண்டியவர்கள் தங்களுக்கு பிடித்த உணவு வகைகளை வாங்கிக் கொண்டனர்.

தடா பால்ஸ் செல்ல நெல்லூர் மெயின் ரோட்டில் இருந்து இடது புறம உள்ளே ஒரு ரோடு பிரியும். அதனுள் சென்றோம் ஆனால் உணவகங்கள் எதுவும் கிடையாது. எனவே அங்கேயே தேவையான அனைத்து உணவுப் பொருட்களும் வாங்குவது நல்லது.

அங்கிருந்து சுமார் பதினாலு கி.மீ (கரடு முரடான பாதை சுமார் 7 கி.மீ வரும்) தாண்டினால், வாகன நிறுத்தத்திற்கான இடம் வரும். போகிற வழியில் இப்போது பர பரப்பாக பேசப்பட்ட போதை லேகியம் கல்கி பகவானின் வொன்நஸ் அமைப்பின் மார்பிளில் ஆன பெரிய கோபுரம் இருக்கும். பார்க்க அவ்வளவு அழகு. அதற்கு முன்பாகவே சுமார் 7 கி.மீ முன்பாக கரடு முரடு பாதை துவங்கும் இடத்தில் ஒரு செக் போஸ்ட் இருக்கிறது. அங்கே உள்ளவர்கள் வண்டியை பரிசோதனை செய்கிறார்கள். நாங்கள் மாட்டிக் கொண்டோம். எங்களிடம் இருந்து 200 ரூபாய் பிடுங்கிக்கொண்டனர். வண்டிக்கான தொகை ஐம்பது மற்றும் ஒவ்வொருவருக்கும் தல இரண்டு ரூபாய் அனைத்தையும் செலுத்திய பின்னர் உள்ளே அனுமதிக்கப் பட்டோம்.

முன்பு செக் போஸ்ட்டில் உஷாரான நாங்கள் இப்போது கோட்டை விட்டதை நினைத்து ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டோம். பார்கிங் ஏரியாவிலிருந்து உள்ளே மூன்று கிலோமீட்டர் நடந்தோமேயானால் தடா நீர்வீழ்ச்சியை அடைந்துவிடலாம். நாங்கள் ஒருவழியாக பார்கிங் ஏரியா அடைந்த போது மணி ஒண்ணை நெருங்கிவிட்டிருந்தது. கொளுத்தும் வெயிலில் மேலே பயணித்தோம்.

செல்லும் வழியெங்கும் பக்கவாட்டில் சிறு சிறு நீரோடைப் பிரிவுகள், சுற்றிலும் மரங்கள், சிறு சிறு கற்கள் நிறைந்த பாதை என்று நடை பயணம் தொடர்ந்தது. பல இடங்களில் தமிழக இளைஞர்களின் கூக்குரல்கள் அவர்கள் பேசிய கேட்ட வார்த்தைகளின் மூலம் கேட்க முடிந்தது. நான் கவனித்த ஒரு விஷயம் அங்கே ஆந்திர மற்றும் பிற மாநிலத்தவர் வருகை சொற்பமே. முழுக்க முழுக்க தமிழக வண்டிகள் தான் அதுவும் சென்னை எண் கொண்ட வண்டிகளை தான் காண முடிந்தது.

ஒன்றரை கி.மீ பயணித்தால் ஒரு சிவன் கோவில் வரும். அதன் பின்னர் ஒரு சிறிய நீரோடை. மேலே நீர்வீழ்ச்சியில் தண்ணி இல்லை என்று நாங்கள் அறிந்ததால் அங்கேயே நிறுத்திக் கொண்டோம் எங்கள் பயணத்தை. அந்த நீரோடையிலேயே குளித்து விட்டு கிளம்பிவிடலாம் என்று திட்டமிட்டோம். அதன் படி நீரோடையில் அனைவரும் இறங்கினோம், முற்றிலும் பாறைகள் தான். எனவே பார்த்து பார்த்து அடியெடுத்து வைக்க வேண்டியதாகி விட்டது.

சிறிது நேரம் கழித்து வாங்கி வைத்திருந்த சரக்கை அடித்து விட்டு, சில தம்முகளை போட்ட பின் மீண்டும் எங்கள் உற்ச்சாக குளியல் இரண்டு மணி நேரம் நீடித்தது. தண்ணீர் ஆறு அடி தான் இருந்தது. எனவே தைரியமாக குளிக்க முடிந்தது. பின்னர் சுமார் ஐந்து மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டோம்.

உடலும்,மனமும் சுத்தமாக ஆனது போல அப்போது உணர்ந்தேன். மெயின் ரோட்டில் வந்து டீயும், வடையும் சாப்பிட அவ்வளவு சுவையாக இருந்தது. நீண்ட நேரம் நீரிலேயே கிடந்ததால் ஏற்பட்ட பசியின் விளைவு. பயணம் இனிதே நிறைவடைந்தது. நீங்களும் ஒருமுறை கட்டாயம் செல்லுங்கள்.ஏற்கனவே சென்றவர்கள் உங்கள் நினைவுகளை மீட்டெடுங்கள்.