வணக்கம் நண்பர்களே!
மிக நீண்ண்ண்ண்...ட இடைவெளிக்குப்பின் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி... இடைப்பட்ட நாட்களில் நிறைய பயண அனுபவங்கள், நிறைய எழுத சங்கதிகள் இருந்த போதும், ஏனோ எழுத தோன்றவில்லை. பிறர் தளங்களை முன்பு போல தொடர்ந்து வாசிக்க முடிந்தாலும், பின்னூட்டமிட இயலவில்லை. இருப்பினும் பல புதிய பதிவர்களின் தளங்களும் எழுத்துக்களும் சற்று ஆக்கப்பூர்வமாகவும், படிப்பதற்கு ஆர்வமாகவும் இருப்பதைக் காணமுடிகின்றது. இரண்டு வருடங்கள் முன்பு நான் சென்னையில் இருந்த காலத்தில் அறிமுகப் பதிவராக இருந்த காலத்தில் பதிவர் சந்திப்பு என்பது மிக அரிதாக நடந்து கொண்டிருந்தது. அழைப்பு இல்லாமல் அதற்கு செல்வதற்கும் எனக்கு சங்கோஜமாக இருக்கும். ஆனால் இப்போது அடிக்கடி பதிவர் சந்திப்புகள் நடப்பதும், பல புதிய பதிவர்கள் கலந்துகொள்வதும் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
சொல்லப்போனால் இந்த கலவை இடுகையான மாஞ்சாவும் கூட மிக நீண்ட இடைவெளிக்குப் பின் என்னிடமிருந்து. இதற்கும் காரணம் இருக்கிறது.என் வாழ்வில் சில நல்ல நிகழ்வுகள் நடக்க இருப்பதால் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு இந்த இடுகை.
மரணத்தை நோக்கி இன்னொரு மைல் கல்:
உங்கள் அனைவரது ஆசியும், வாழ்த்துகளையும் எதிர்நோக்கி டக்கால்டி அன்புடன் வெளியிடும் இந்த செய்தி யாதெனில், ஆம்! இன்று முதல் எனக்கு 27 வயது முடிவடைகிறது. சொல்லிக் கொள்ளும்படி உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்றாலும், முடிந்த அளவுக்கு யாருக்கும் உபத்திரவம் செய்யாமல் இருப்பது நினைவுக்கு வந்து மனதுக்கு சிறு மகிழ்ச்சியை அளிக்கிறது. மரணத்தை நோக்கி இன்னுமொரு மைல் கல் கடந்து விட்டேன் என்று மனது வரப்போகும் மரணத்துக்கும், மாற்றத்துக்கும் தைரியம் அளிக்கிறது.
கெட்டி மேளச்சத்தம்:
பொதுவாக எனக்கு பள்ளிக் காலத்திலும் சரி, கல்லூரிக் காலத்திலும் சரி என்னுடன் படித்த அனைவருமே என்னை தன் நண்பனாக கருதுவார்கள். நினைத்துப் பார்த்தால் எனக்கே அது சற்று வியப்பாக இருந்தாலும், அதற்கு காரணம் அடுத்தவர் பெர்சனல் விஷயத்தில் தேவை இல்லாமல் மூக்கை நுழைக்காததும், பட்டும் படாமல் இருந்ததும் தான் என்று நினைக்கத் தோன்றுகிறது. இருப்பினும் காலப்போக்கில் படிப்பு முடிந்து அனைவரும் சிதறி விட்ட இந்த தருணத்திலும் அடிக்கடி சந்தித்து பேசி மகிழும் வாய்ப்பு என்னை தனது உயிர் நண்பனாக கருதும் வெகு சிலர் ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றனர். அப்படிப் பார்த்தால் எனது இந்த குறுகிய நட்பு வட்டத்தில் உள்ள என் உயிர் நண்பன் "அருண்"க்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. வரும் அக்டோபர் மாதம் தன் காதலியை மனைவியாகக் கைபிடிக்க இருக்கிறான். உண்மைக் காதல் எல்லாம் இந்த காலத்தில் ஏது? என்ற கேள்விக்கு தான் 7 வருடமாக காதலித்து வந்த பெண்ணையே மதம் பாராமல் மணமுடிக்கப் போகும் அவனுக்கு எனது வாழ்த்துகளோடு உங்கள் வாழ்த்துகளும்!!!
பாபா படத்தில் ரஜினிக்கு கிடைத்த ஏழு மந்திரங்கள் போல, எனக்கு கிடைத்தது 24 மந்திரங்கள். என்ன குழப்பமாக இருக்கிறதா? நான் மந்திரம்னு சொன்னது எனக்கு மாதம் இங்கே கிடைக்கும் சம்பளத்தை. ஆம் கிடைத்த ஒரு ஆண்டு விசா முடிவடைந்துவிட்ட நிலையில் இன்னொரு ஆண்டுக்கான எக்ஸ்டென்ஷன் அப்ளை செய்தாகிவிட்டது. இன்னொரு வருடம் அமெரிக்கா வாழ்க்கை என்று நினைக்கும்போதே ஒருவித மனசலிப்பு. இருப்பினும் இங்கு இருந்த இந்த பதினோரு மாதத்தில் சிக்கனமாக செலவழித்து தங்கை திருமணத்துக்காக சில லட்சங்களை சேர்க்க முடிந்தது மட்டுமே ஆறுதல். நிச்சயதார்த்தம் நல்லபடி நடந்து முடிந்துவிட்டது. டிசம்பரில் திருமணத்துக்கு நாள் குறித்துவிட்டனர். என்னுடன் வளர்ந்து வந்தவளுக்கு திருமணம். நினைத்துப் பார்க்கையில் வேடிக்கையாக இருக்கிறது. சல்லிக்காசு பேங்க் பேலன்ஸாக என் அப்பா சேர்த்து வைக்க இயலவில்லை என்றாலும், சரியான தருணத்தில் எப்படியோ பணம் புரட்ட நானும் காரணம் என்பதை நினைக்கையில் பெருமிதமாக இருந்தாலும், விசா பிரச்சினையால் என்னால் அவள் திருமணத்துக்கு செல்ல இயலாது என்பது சற்று வருத்தம் தான். இப்படி இன்னும் எத்தனை இழப்புகளோ, இருக்கப்போகும் அடுத்த ஆண்டிலும்? காலம் தான் பதில் சொல்லும்.
பேசியதில் பிடித்தது:
நேற்று நண்பர்களுடன் அறையில் நிழல்கள் படம் பார்த்துக்கொண்டிருந்த போது, கதையின் நாயகனான ராஜசேகரன், வீணை வித்வான் சாருஹாசனிடம் வீணைக் கற்றுக் கொள்ள செல்லும் காட்சியில், சாருஹாசன், "நாளைக்கு நிறைஞ்ச அமாவாசை...நல்ல நாள்..நாளைக்கு வா" என்பார். இதைக்கேட்ட நண்பர் ஒருவர், "அமாவாசை நல்ல நாளா? பவுர்ணமி தான நல்ல நாள் என்பார்கள்" என்று கேட்க, அமாவாசை தான் வளர்ச்சியின் தொடக்கத்துக்கு அறிகுறி என்று நான் சொன்னேன். ஆனா அன்னைக்கு இருட்டா தான இருக்கும், அதெப்படி நல்ல நாள்ன்னு சொல்றாங்க என்றார். அப்போது தோன்றிய வரிகள் இவை.
"இருட்டிலே
வளர்ச்சியின் தொடக்கம்
அமாவாசையும் கருவறையும்"
இசையில் அசைபோட்டது:
மயக்கம் என்ன என்ற செல்வராகவனின் படத்தில் உள்ள பாடல்களின் தொனி மனதை எளிதில் கவருகின்ற விதத்தில் அமைந்திருக்கின்றன. குறிப்பாக "ஓட ஓட ஓட தூரம் குறையல" என்ற பாட்டை கேக்கும் போது ரோஜா படத்தின் "சின்ன சின்ன ஆசை" பாட்டின் எளிமையான ஸ்கூல் ரைம் மெட்டு ஞாபகத்துக்கு வருகிறது. வெல்டன் ஜி.வி
அதே போல இப்போது பதிவுலகமே பரபரத்து பேசும் எங்கேயும் எப்போதும் படத்தில் வரும் 'கோவிந்தா கோவிந்தா' பாடு எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே என்று ஒரு வாரமாக அசை போட்டு இறுதியில் அதன் சாரம்சத்தை கண்டுபிடித்து விட்டேன். இசைஞானியின் "ஓரம் போ..ஓரம் போ..ருக்குமணி வண்டிவருது" என்ற பாடலை சற்று மெதுவாக பாடுங்கள்.
"கோவிந்தா கோவிந்தா சென்னையில புது பொண்ணு"...
மீண்டும் சந்திப்போம்...நன்றி..வணக்கம்!!!
14 comments:
//வணக்கம் நண்பர்களே!
மிக நீண்ண்ண்ண்...ட இடைவெளிக்குப்பின் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி... //
எங்களுக்கும் மகிழ்ச்சியே!
//இன்னொரு வருடம் அமெரிக்கா வாழ்க்கை என்று நினைக்கும்போதே ஒருவித மனசலிப்பு. இருப்பினும் இங்கு இருந்த இந்த பதினோரு மாதத்தில் சிக்கனமாக செலவழித்து தங்கை திருமணத்துக்காக சில லட்சங்களை சேர்க்க முடிந்தது மட்டுமே ஆறுதல். //
ஆம், வெளிநாட்டு வாழ்வில் அது ஒன்று தான் ஆறுதல்!
சிலர் அதையும் செய்ய மாட்டார்கள். பொறுப்புள்ள அண்ணனுக்கு வாழ்த்துகள்.
//இசைஞானியின் "ஓரம் போ..ஓரம் போ..ருக்குமணி வண்டிவருது" என்ற பாடலை சற்று மெதுவாக பாடுங்கள்.//
ஆமாம், முதல் வரி அது மாதிரி தான் இருக்கு!
பர்சனல் விஷயங்களை பொதுவெளியில் பகிர்ந்துக்கொல்வதற்கு ஒரு மனது வேண்டும்... அது உங்களிடம் இருக்கிறது...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... கூடவே உங்களுக்கும் விரைவில் திருமணம் நடைபெற வாழ்த்துக்கள்...
ஓட ஓட பாட்டை இதோட ஒரு நூறு முறை கேட்டிருப்பேன்... ரொம்ப பிடிச்சிருச்சு...
மாப்ள வாழ்துக்கள்ய்யா....சங்கடப்படாதே நீயே பிரம்மா நீயே விஷ்ணு....நீயே சாதாரண மனிதனாய் ஆகுக....இதுவே வாழ்வின் சாராம்சம்....வாழ்வின் எந்த நிலைமையிலும் வருத்தப்படாதே...நண்பா..கடவுள் உன்னை வைத்து ஆடும் பரம பதத்தை நினைத்துக்கொள் நன்றி!
வாங்க... வரவு நல்வரவாகுக...
niraivana pathivu
வாங்க வாங்க மீண்டும் எழுத ஆரம்பிச்சுடுங்க வெயிட்டிங்க்.
அகவை 28 ல் அடி எடுத்துவைக்கும் தங்களுக்கு வாழ்த்துகள்.
// சல்லிக்காசு பேங்க் பேலன்ஸாக என் அப்பா சேர்த்து வைக்க இயலவில்லை என்றாலும்//
நீங்களும் நம்ம அணிதானா? இனி எல்லாம் சக்சஸ்தான்.
டக்கால்டி வந்தாச்சி இனி அதகளம் ஆரம்பம் பம் பம் பம் பம்....
நம்ம சைட்டுக்கு வாங்க!
கருத்த சொல்லுங்க!!
நல்லா பழகுவோம்!!!
Post a Comment