Feb 10, 2011

இருவர்...


25 ஆவது இடுகையில் இருவர்

தமிழக மீனவர்கள் விஷயத்தில் இதுவரை 6897 கையொப்பங்களே பதிவாகி இருக்கிறது. நண்பர்களே இன்னும் தீவிரம் தேவை. 

சென்ற பதிவை தமிலிஷின் பிரபலமானவை பகுதியில் கொண்டு வருவதற்கு வாக்களித்த அனைத்து உள்ளங்களுக்கும்,படித்த மற்றும்  படித்து பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியும் வணக்கமும்.!!!என்னை பின்தொடரும்  நண்பர்களுக்கும்
 இவ்வேளையில் எனது நன்றிகள் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.


நான் சரியாக போன வருடம் பிப்ரவரியில் தான் இந்த டக்கால்டி வலைப்பூவை தொடங்கினேன். சரியாக ஒரு வருடம் ஆகின்றது. சரி இதுவரை என்ன எழுதி கிழித்து இருக்கிறோம் என்று சற்று அசைபோட்டு பார்க்கையில் இந்த இடுகை சரியாக 25 வது இடுகையாகும். ஒரு வருட காலத்தில் மிகவும் குறைந்த இடுகைகளை எழுதி சாதனை படைத்தது நானாகத் தான் இருக்கும்.எல்லாம் சோம்பலின் வெளிப்பாடே.ஆனாலும் கூட எழுதிய வரையில் 60 % (என்னைப் பொறுத்தவரையில்) சற்று உருப்படியாக எழுதி வருகிறேன் என்று நினைக்கிறேன். பல நல்ல விஷயங்கள் எழுத நினைத்து மறந்து போயிருக்கிறேன். இந்த வருடம் எப்படி அமைகின்றது என்று எனக்கு எந்த ஒரு கணிப்பும் இல்லை.

சரி இந்த இருபத்தைந்தாவது இடுகையை மிகவும் அழகியலாக படைக்க வேண்டும் என்று யோசித்ததில் ஒரு மனதிற்கு இதமான, பார்க்கும் போதே மென்மையாக காட்சி அளிக்கும், பழகிய பிறர் கூறிய வரைக்கும் இனிமையானவர் போன்ற சிலரைப் பற்றி சிலாகித்து எழுதலாம் என்று தோன்றியது. இதுவும் ஒரு சினிமா சார்ந்த இடுகையாகவே இட வேண்டியது ஆகிவிட்டது. என் மனதில் தோன்றிய இரண்டு இனிமையான நபர்களைப் பற்றி இங்கு காண்போம். இவர்களுள் ஒருவர் இப்போது உயிருடன் இல்லை. மற்றொருவர் அமைதியாக தனது அடுத்த படைப்பின் வெளியீட்டில் முனைந்து இருக்கிறார். இந்த இருவரையுமே எனக்கு பிடிக்க காரணம் இவர்களது அலட்டலும் ஆர்ப்பாட்டமும் இல்லாத அமைதியான வாழ்கை முறை தான்.

முதலாமவர் இயக்குனர் ராதாமோகன்:

 இப்படி ஓர் படைப்பாளி நமது தமிழ் சினிமாவிற்கு கிடைத்து இருப்பது என்பதே நமது சிறப்பு தான். கதைக்காக ரூம் போட்டு யோசிக்காமல், பன்ச் டையலாக்குகளுக்கு  அதிகம் சிரத்தை எடுத்துக் கொள்ளாமல், ஹீரோயிசத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஒரு சாமானியனின் வாழ்க்கை முறையை மிகை இல்லாமல் காட்டுவதில் ஆகட்டும் இவருக்கு நிகர் இவரே.  எனக்கு தெரிந்து இயக்குனர் பாலாவுக்கு அடுத்து ஒவ்வொரு படத்தையும் அதிக இடைவெளி இருந்தாலும் சிறப்பாக அமைக்க இவர் காட்டும் முனைப்பு பிரமிக்க என்னை வைக்கிறது.

பாலா, இயக்குனர் அவதாரம் எடுத்து 11 வருடங்கள் ஆகியும் அவர் இதுவரை இயக்கி வெளிவந்த படம் மொத்தமே நான்கு தான்.இயக்கத்தில் இருப்பது ஒரு படம் ஆக மொத்தம் 5 படங்கள்.அதைப் பற்றி உங்களுக்கு அதிகம் சொல்லத் தேவை இல்லை. அதே போல தான் ராதா மோகனும், இயக்குநராகி 7 வருடங்கள்
ஆகியும்  அவர் இயக்கியுள்ள படங்கள் 4 .இயக்கத்தில்  உள்ள படம் ஒன்று. ஆக மொத்தம் 5 . இவ்விருவருக்கும் இன்னொரு ஒற்றுமை என்னவெனில் இருவருமே தங்கள் பாணியிலான கதைக்களனை கைவிட்டு வேறொரு வடிவில் தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார்கள்.இன்னொரு சுவாரசியமான தகவல் இருவரின் வயதும் ஏறக்குறைய ஒன்றே. சொல்லப் போனால் பாலா ராதாமோகனை விட 7 மாதம் தான் சிறியவர்.இதெல்லாம் ஒரு சிறிய  ஒப்பீடு      தானே ஒழிய இருவரும் தங்கள் பணியில் தங்கள் பாணியில் இரு துருவங்கள் போல.

ராதாமோகன் அவர்களின் படங்களில் எனக்கு பிடித்த இன்னொரு விஷயம் அவர் படத்தில் ஒரு கேரக்டர் மறக்கவே முடியாமல் என்று நிலைத்து நிற்கும். உதாரணம்- மொழி படத்தில் எம் .எஸ்.பாஸ்கரின் ப்ரோபாசர் கேரக்டர் மற்றும் அபியும் நானும் படத்தில் வரும் இயக்குனர் மனோபாலாவின் கேரக்டர்.
அந்த கேரக்டர்களின் வசனங்களான "மார்க் மை வேர்ட்ஸ்" மற்றும் "என்ன ரகுராமன் பொண்ண ஸ்கூல்ல சேக்குறீங்க போல இருக்கு" மற்றும் இதே டெம்ப்ளேட்டில் படம் முழுதும் மனோபாலா சார் பேசும் வசனங்கள் இப்போது நினைத்தாலும் ஒரு இதமான  சின்ன புன்சிரிப்பை வரவழைக்கிறது.

இப்படி பட்ட ஒரு இயக்குனர் இன்னும் புகழின் உச்சிக்கு செல்லாமல் இருப்பது அவரின் படங்களைப் போலவே அவரது மனமும் வாழ்வும் பண்பட்டு இருப்பதை காட்டுகிறது. எத்தனை பேர் இவரை பற்றி சிலாகித்து இடுகை எழுதி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. முதல் ஆள் நானாக இருப்பின் எனக்கு அதில் சந்தோஷமே. 

இரண்டாவது இனிய நபர் அண்மையில் காலமான இளமை நாயகன் நடிகர் முரளி:


நிறைய படங்களில் நடித்த நடிகர். சீனியர் என்ற பந்தா இல்லாத ஆள். அவர் மறைவின் சில தினங்களுக்கு முன்னர் அவர் பங்கு கொண்ட கதையல்ல நிஜம் நிகழ்ச்சியை எதேச்சையாக நான் பார்த்த போது, அவர் தனது நடிப்பு அனுபவம், திரையுலக ஏற்ற இறக்கங்கள், நடந்த அவமானங்கள்  பற்றி  பேசிய விதம் என்னை அன்று கவர்ந்தது. இப்படியொரு யதார்த்தமான, ஆர்ப்பாட்டமில்லாத நடிகனை, முக்கியமாக மனிதனை  நாம் இதுவரை கண்டு கொள்ளவே இல்லையே என்று எண்ணினேன். என் அம்மாவும் மிகவும் ரசித்து அந்த நிகழ்ச்சியை பார்த்தார். சரியாக மூன்று நாள் கழித்து அந்த புதன் கிழமை காலை நான் அலுவலகம் கிளம்பும் வேளையில் அன் அம்மாவிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு. "நடிகர் முரளி செத்துட்டானாம் டா' என்றது என் அம்மாவின் சற்றே உடைந்த குரல்.அந்த கதையல்ல நிஜம் நிகழ்ச்சியின் முரளி அவர்கள் பேசியதன் பாதிப்பு என்னைப் போலவே என் அம்மாவிடத்திலும் அது சரி நல்ல மனிதன் எங்கே நெடு நாள் வாழ்கிறான்.இறைவன் தான் அவர்களை தன் பக்கம் சீக்கிரம் இழுத்துக்கொ(ல்)ள்கிறானே.. ..

 ஒரு மனிதன் வாழ்ந்த போது எத்தகைய புகழை கொண்டு வாழ்ந்தான் என்பது முக்கியமில்லை, அவன் சாகும் போது அவனுக்காக எத்தனை பேர் வருத்தப்படுகிறார்கள் என்பதே அவன் வாழ்ந்த வாழ்வின் உன்னத நிலையை குறிக்கின்றது என்ற கருத்தை இவரது மரணத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இவரது மரணத்துக்கு வருந்தாதவர்கள் எனக்கு தெரிந்து யாருமே இல்லை. டாஸ்மாக்கில் ஆரம்பித்து, முனியாண்டி விலாஸ் முதல் மல்டிப்ளெக்ஸ் வரை எனக்கு தெரிந்த முகங்கள் அனைவரும் கூறிய விஷயம் "பாவம் முரளி செத்துடான்யா..நல்ல மனுஷன்" என்றது தான். ஒரு மனிதன் உயிரோடு இருக்கும் போது அவன் முக்கியத்துவமோ, அவன் செய்த சாதனைகளோ, (அட சாதனைகளை விடுங்க இப்பெல்லாம் நாட்டுள்ள எல்லாருமே சாதிக்க பிறந்துட்டானுங்க) அவன் யாருக்கும் முடிந்த வரையில் உதவாமல் போனாலும் துரோகம் இழைக்காமல்  வாழ்ந்த வாழ்க்கை முறையையோ நாம் கவனிப்பதோ, மதிப்பதோ இல்லை. மறைந்த பிறகே உச்சு கொட்டுகிறோம் என்ற பாடத்தை தான் இவரது மறைவு எனக்கு கற்று கொடுத்து இருக்கிறது.

இன்னும் நிறைய என் மனதில் தோன்றுகிறது. எழுத மனம் கனக்கிறது.பொறுமையுடன் படித்த அனைவருக்கும் என் நன்றி...

13 comments:

சக்தி கல்வி மையம் said...

ஒரு வருட காலத்தில் மிகவும் குறைந்த இடுகைகளை எழுதி சாதனை படைத்தது நானாகத் தான் இருக்கும்.//
நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

வாழ்த்துக்கள்

எனக்கு பிடித்த இயக்குனர் தானுங்க..........

முரளி - உண்மையில் நம்ப முடியாம இருந்தது எனக்கு இவரு இறந்துட்டாருன்னு கேட்ட போது!

MANO நாஞ்சில் மனோ said...

//நல்ல மனிதன் எங்கே நெடு நாள் வாழ்கிறான்.இறைவன் தான் அவர்களை தன் பக்கம் சீக்கிரம் இழுத்துக்கொ(ல்)ள்கிறானே.. ..//


நெஞ்சை கலங்க வைத்து விட்டீர்கள் மக்கா....

டக்கால்டி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே...

Bharath_HM said...

பாலாவும், ராதா மோகனும் நிச்சயம் ஆதரிக்கப்படவேண்டிய இயக்குநர்கள். ராதாமோகனுக்கு படம் தயாரிக்க பிரகாஷ்ராஜ் என்னும் நண்பன் கிடைத்ததால் கொஞ்சம் நிம்மதி. பாலாவுக்கு பாலுமகேந்திரா என்னும் குரு கிடைத்தது பாக்கியம்.

Bharath_HM said...

நடிகர் முரளிக்கு மீண்டும் ஒருமுறை எமது அஞ்சலிகள்..

Bharath_HM said...

25 க்கு வாழ்த்துக்கள்.
இந்த வருடம் இன்னும் நிறைய எழுதுங்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

>>>இப்படி பட்ட ஒரு இயக்குனர் இன்னும் புகழின் உச்சிக்கு செல்லாமல் இருப்பது அவரின் படங்களைப் போலவே அவரது மனமும் வாழ்வும் பண்பட்டு இருப்பதை காட்டுகிறது

நல்லதுக்கு காலமில்லைங்கறது இவர் விஷயத்துல தப்பா போகட்டும். உங்க கட்டுரை நடை அழகு ஃபாலோயர் ஆகிட்டேன்.. அடிக்கடி பதிவு போடுங்க..

ம.தி.சுதா said...

////ஒரு வருட காலத்தில் மிகவும் குறைந்த இடுகைகளை எழுதி சாதனை படைத்தது நானாகத் தான் இருக்கும்////

எப்படியெல்லாம் சாதனை வைக்கிறாங்கப்பா..

பதிவு அருமை...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

டக்கால்டி said...

பாரதி,சி.பி, மற்றும் ம.தி. சுதா உங்க வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க...

குறையொன்றுமில்லை. said...

நல்லஇரு மனிதர்களின் அறிமுகம் அருமை. பூக்கடைக்கு விளம்பரம் தேவை இல்லைதான்.

goma said...

முத்துராமன் போல் இவரும் ஒரு அமைதியான ஆர்ப்பாட்டம் இல்லாத நல்ல கலைஞன்.

டக்கால்டி said...

வணக்கம் லக்ஷ்மி அம்மா மற்றும் தோழி கோமா...
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி...