Feb 9, 2011

"யுத்தம் செய்"யும் உலக சினிமாவும்...

"யுத்தம் செய்"யும் உலக சினிமாவும்...

நேற்று தான் யுத்தம் செய் படத்தைப் பார்த்தேன். இந்த படத்தை பற்றி பலரும் விமர்சனம் எழுதிட்டாங்க.அதனால படத்தைப் பத்தி புதுசா சொல்றதுக்கு ஒன்னும் இல்லீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு படத்தை மிஷ்கின் கிட்ட இருந்து நான் எதிர்பார்க்கவில்லை.




2006 ஆம் வருடம் ஒரு ஜனவரி மாத நாளில் கோவையில் உள்ள குட்டிசுவர் எங்கும் ஓட்டப் பட்டிருந்த ஒரு படத்தின் சுவரொட்டி என் கவனத்தை மிகவும் ஈர்த்தது. படம் வெளிவரும் முன்பே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன அப்படத்தின் போஸ்ட்டர்கள். சொல்லப் போனால் ஒரு படத்தின் போஸ்ட்டரைப் பார்த்தே அந்த படம் எப்படி இருக்கும் என்பதை 75 % யூகிக்க எனக்கு கற்றுக் கொடுத்ததே இந்த படம் தான் என்று சொல்லலாம். அந்த படத்தின் பெயர் சித்திரம் பேசுதடி.அது தான் மிஷ்கினின் முதல் படம் என்று நம் அனைவருக்குமே தெரியும்.ஆனால் மிஷ்கின் என்று ஒரு இயக்குனர் இருக்காரு டா என்று அனைவரையும் சொல்ல வைத்த படம் அது.

இப்படி போஸ்ட்டரைப் பார்த்து சில படங்களில் நான் மொக்கை வாங்கியிருந்தாலும், பல படங்கள் எனக்குப் பிடித்திருந்தது. உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமேயானால் நந்தா பெரியசாமியின் இயக்கத்தில் 'ஒரு கல்லூரியின் கதை', விஷ்ணு வர்த்தனின் 'அறிந்தும் அறியாமலும்', ராமின் 'கற்றது தமிழ்', நிஷிகாந்த் காமத்தின் 'எவனோ ஒருவன்', புஷ்கர்-காயத்ரியின் 'ஓரம் போ', சமுத்திரக்கனியின் 'நாடோடிகள்' போன்றவை.



அடுத்த படமான அஞ்சாதேவில் கூட மிகச் சிறப்பான தனது இயக்கத்தை வெளிப்படுத்தி இருப்பார் மிஷ்கின். சொல்லப் போனால் அதிலும் கூட சித்திரம் பேசுதடியில் வரும் கதாநாயகனின் நடை, பாவனைகள் இடம் பெற்றிருக்கும். நந்தலாலாவிலும் அதையே காணமுடிந்தது. இதோ இப்போது யுத்தம் செய் படத்திலும் அதே ஹீரோ மேனரிசங்கள். அமீர் படத்தில் அவருடைய மேனரிசங்களை ஹீரோ நடிப்பில் காணலாம். அதே போலவே தான் மிஷ்கின் படத்திலும். ஆனால் அன்று சித்திரம் பேசுதடியில் நான் மிகவும் ரசித்த அந்த மேனரிசத்தை, நடிப்பை யுத்தம் செய் படத்தில் ஏனோ ரசிக்கவில்லை.


இந்த படம் ஒரு உலகப் படத்தின் தழுவல், உலகப் படத்தை தமிழ்ப் படுத்தும் முயற்சி என்று எவ்வளவு தான் கூறினாலும், அந்த மாதிரி தமிழ் படுத்தப் படுகிற உலகப்படங்களை எல்லாம் இப்போது அனைத்து தொலைக்காட்சிகளும் ஞாயிற்று கிழமைகளில் ஒளிப்பரப்பிக் கொண்டிருக்கிறது. ஆம் நான் டப்பிங் பேசும் ஜாக்கி சான் படங்களை தான் சொல்கிறேன்.




எனக்கு இன்னும் ஒன்னு புரியலைங்க... உலக சினிமா என்பது உலகில் உள்ள அந்தந்த நாடுகளில் வீற்றிருக்கும் கலாசாரத்தையும்,வாழ்க்கை முறையையும் கேமராவில் கோர்வையாக பிரதிபலிப்பது என்பது என் கருத்து.

அதனால் தான் என்னவோ 'தவமாய் தவமிருந்து' என்ற படத்தை ரசிக்க
முடிந்த எனக்கு இந்த படத்தை ரசிக்க முடியவில்லை. சொல்லப் போனால் தவமாய் தவமிருந்தும், பருத்தி வீரனும் தான் நம்ம நாட்டின் வாழ்கை முறைகளை பதிவு செய்த சில உலகப் படங்களுக்கான உதாரணங்கள்.



'காக்க காக்க' எடுத்த பிறகு அதன் சீக்வெல் ஆக 'வேட்டையாடு விளையாடு' என்ற படத்தை எடுத்த போது கவுதம் மேனனிடம் காண முடிந்த தொய்வை இப்போது மிஷ்கினிடம் காண முடிகிறது. இதில் வருத்தப்படுகிற ஒரு ஆளாக நானும்.


நந்தலாலாவின் தோல்வியால் மிஷ்கின் செய்த சில காம்ப்ரமைஸ்கள் இந்த படத்தில் அப்பட்டமாகவே தெரிகின்றன. 'வாள மீனுக்கும்' பாடலை விட 'கத்தாழ கண்ணால' பாடல் கொஞ்சம் பொலிவிழந்து போனது. அதே போல அதே ஸ்டைலில் இருக்கும் 'கட்டழகி கண்ணா' என்ற பாடலும். கேட்க நல்லா இருந்தாலும் பார்க்கும் போது சலிப்படைய செய்கின்றது. இந்த பாட்டுக்கு அமீர் எதுக்கு ஆடினாரு என்று தெரில.


 
சரி படத்தில் பிடித்த சில விஷயங்களை காண்போம்.


1 )முதல் விஷயமே இந்த படத்தின் சஸ்பென்ஸ் தான். அது உடைக்கப் பட்டதாலேயே படம் சப்புன்னு ஆகிடுச்சு. கே.எஸ் ரவிக்குமார் "புரியாத புதிர்" என்ற தனது முதல் படத்தை இயக்கும் போது அதன் செலவு வெறும் 29 லட்சம் தான். முப்பது நாளில் ஷூட்டிங் முடித்த அவரிடம் அதன் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, "படம் நல்லா வந்திருக்கு, கதை அருமையா இருக்கு நான் வேணும்னா இன்னும் கொஞ்சம் பணம் போடுறேன், படத்தை இன்னும் கொஞ்சம் ரிச்சா எடுத்துடலாம்" என்றாராம். அப்போது அதை மறுத்த ரவிகுமார், "சார் இந்த படத்துல சஸ்பென்ஸ் தெரிஞ்சுடுசுனா ரிப்பீட்டட் ஆடியன்ஸ் கம்மி ஆகிடும். அதனால இதுவே போதும்" என்றாராம். எப்புடி அவரோட மார்கெடிங் ஸ்ட்ரேட்டஜி!!!?


2 ) படத்தின் நடிகர்கள்- அனைத்து கதாப்பாத்திரத்துக்கும் அருமையான நடிகர்களை தேர்வு செய்திருக்கிறார் மிஷ்கின். லக்ஷ்மி ராமகிறிஷ்ணனின் நடிப்பு சற்று மிகையாகவே இருக்கிறது.வொய்.ஜி . மகேந்திரனின் நடிப்பு கச்சிதம். இவர்கள் இருவருக்குமே டைலாக் கம்மி என்பது தான் சுவாரசியமே. என்னோட அபிமான நடிகராக ஆகிவிட்ட ஜெயப்ரகாஷ் வழக்கம் போலவே தனது மிகை இல்லாத நடிப்பால் அசத்தி இருக்கிறார். சாகும் போது அவர் பேசும் வசனங்கள் பளிச். குலுங்கி குலுங்கி அழுத சேரனுக்கு இதில் மாறுபட்ட ஒரு கதாப்பாத்திரம். "தங்கச்சி காணாம போனதில இருந்தே பொணம் போல ஆயிட்டாருங்க" என்ற வசனத்துக்காகவே நடை பிணம் போல நடக்கிறார்..சாரி நடித்து இருக்கிறார். மற்ற கதாப்பாத்திரங்கள் ஆன மாணிக்க விநாயகம் மற்றும் பெருசுகள் தான் படத்துக்கு உயிர் நாடியே...

3 ) மற்ற டெக்னிகல் விஷயங்களான இசை மற்றும் ஒளிப்பதிவு பற்றி நமக்கு அவ்வளவாக தெரியாது என்பதால் சில வரிகளில் முடித்துக் கொள்கிறேன். இசை கே என்ற புதுமுகம். சுந்தர்.சி.பாபுவுக்கு கல்தா கொடுத்து மிஷ்கின் பிடித்திருக்கும் இசையமைப்பாளர். ஒரே பாடலும், பின்னணி இசையும் அற்புதம். சில இடங்களில் அஞ்சாதேயில் கேட்ட அதே இசை ஒலிக்கிறது. யாருக்கு தெரியும் அது மிஷ்கினின் வேண்டுகோளாக கூட இருக்கலாம்.ஒளிப்பதிவு சத்யா என்பவர். கச்சிதமாக செய்திருக்கிறார்.


ஆக மொத்தம் மோசமான படம் இல்லை என்றாலும், மிஷ்கின் போன்ற நான் நம்பிக்கை வைத்திருக்கும் இயக்குனரிடம் இருந்து வெவ்வேறு கதைக் களங்களில் படங்களை எதிர்பார்க்கிறேன்.


பொறுமையுடன் படித்த அனைவருக்கும் எனது நன்றி!!!

14 comments:

Philosophy Prabhakaran said...

புரியாத புதிர் படத்தின் க்ளைமாக்ஸ் முடிஞ்சதும் கதையை யார்கிட்டயும் சொல்லிடாதீங்கன்னு கார்ட் போடுவாங்க... பார்த்திருக்கீங்களா...

டக்கால்டி said...

வாங்க பிரபாகரன்...நான் புரியாத புதிர் க்ளைமாக்ஸ் நோட் பண்ணிருக்கேன். இன்னொரு சுவாரசியமான தகவல் என்னன்னா "அதே கண்கள்" என்ற படம் வெளிவந்த போது கூட அந்த படத்தின் வானொலி விளம்பரங்களில் முடிவை சொல்லிடாதீங்க என்று ஒளிபரப்பினார்கள் என்று கேள்விப் பட்டேன்.

ஆதவா said...

வணக்கம் டக்கால்டி,,

திரைப்படத்தில் நடிகனும் இயக்குனனும் ஒருசேர ஒத்துழைக்க வேண்டும். இங்கே அது மிகவும் குறைவு... தவிர, இயக்குனர்கள் தங்களது சிந்தனைகளையும் கற்பனைகளையும் புகுத்தும் பொழுது தனது மேனரிஷங்களையும் தெரியாமல் புகுத்திவிடுகிறார்கள். இது கதைக்கு முன் தவறில்லை என்றே நினைக்கிறேன். என்றாலும் அஞ்சாதே நரேன், யுத்தம் செய் சேரன் இருவருக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. ஒன்றிரண்டைத் தவிர.

சஸ்பென்ஸ் உடைக்காம விடமுடியாது இல்லையா... ஆனா எப்படி உடைக்கிறாங்க என்பதுதான் சூட்சுமமே.... அஞ்சாதேயில் இவ்வளவு சஸ்பென்ஸ் கிடையாது. எல்லாமே தெரியும்படி இருக்கும். இப்படத்தில் ஒவ்வொரு காட்சிக்குள்ளும் இழுத்து பிறகு மெதுவாக சஸ்பென்ஸை உடைக்கிறார்கள். இது நாவலின் உத்தி..

ஒளிப்பதிவை இன்னொருமுறை பாருங்கள். மற்றபடங்களிலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி நிற்கிறது என்பது தெரியும். வெகு சில காட்சிகள் பின்னவீனத்துவக் காட்சிகளைப் போல இருந்தது. இயக்குனரால் எந்த சாயலுமில்லாத முழுநீள திரைப்படம் தரமுடியும். ஆனால் நந்தலாலா போல வசூல் ஆகியிருந்தால் என்னாவது??? சில பேட்டிகளில் இந்த அவதானத்தைப் பார்க்கமுடிந்தது!!

ஆதவா said...

////அதனால் தான் என்னவோ 'தவமாய் தவமிருந்து' என்ற படத்தை ரசிக்க
முடிந்த எனக்கு இந்த படத்தை ரசிக்க முடியவில்லை.////

தவமாய் தவமிருந்து மிக நல்ல திரைப்படம்... என் வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்திருந்தது... ஆனால் அது ஒரு நல்ல திரைப்படம்தானேயொழிய உலகத் திரைப்படத்தில் சேர்க்க முடியாது. அப்படத்திலும் கொஞ்சம் நாடகத்தனமும் மிகையான நடிப்பும் அழுத்தமில்லாத காட்சிகளும் உண்டு....

டக்கால்டி said...

வணக்கம் ஆதவா,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் முதலில் எனது நன்றி...

அஞ்சாதே நரேன், யுத்தம் செய் சேரன் இருவருக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. ஒன்றிரண்டைத் தவிர. //
எனக்கு தெரிந்த ஒரே வேறுபாடு, வேலை இல்லாமல் ஊதாரியாய் சுற்றி பின் போலிஸ் ஆகும் நரேன் அஞ்சாதேவில்... ஆரம்பத்திலேயே போலிசாக காட்டப்படும் சேரன் இதில்... இங்கே நம் இருவருக்கும் ரசனையும்,பார்வை கோணங்கள் மாறு பட்டிருக்கிறது...

சஸ்பென்ஸ் உடைக்காம விடமுடியாது இல்லையா... ஆனா எப்படி உடைக்கிறாங்க என்பதுதான் சூட்சுமமே.//
நான் சஸ்பென்ஸ் உடைச்சுட்டாங்க என்று சொன்னது விமர்சனம் எழுதும் போது அப்படி பண்ணிட்டாங்களே என்று தான். அனைத்து பதிவர்களுக்கும் எனது சின்ன கோரிக்கை என்னவென்றால், இது போன்ற படங்களின் சஸ்பென்சை சொல்லிவிடாதீர்கள் என்பது தான். என் இடுகையில் இதை தெளிவாக குறிப்பிடாததற்கு மன்னிக்கவும். அடுத்த சில இடுகைகளில் (படங்களைப் பற்றி எழுத தோன்றினால்...) இன்னும் தெளிவாக எடுத்துரைக்க முயற்சிக்கிறேன்.

ஒளிப்பதிவை இன்னொருமுறை பாருங்கள். மற்றபடங்களிலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி நிற்கிறது என்பது தெரியும்//
இதைப் பற்றி நான் ஒன்றுமே குறை கூற வில்லை, ஏனெனில் எனக்கு புரியாத தெரியாத விஷயங்களைப் பற்றி எனக்கு தைரியமாக சொல்ல மனம் வராது. ஒரே கதைக் கலனை கையாண்டது தான் இந்த படத்தின் பின்னடைவும்,என் போன்ற சில ரசிகர்களின் ஆதங்கமும்.

உங்கள் நீண்ட பின்னூட்டத்துக்கும்,கருத்துப் பகிர்தலுக்கும் மீண்டுமொருமுறை எனது நன்றி...

டக்கால்டி said...

தவமாய் தவமிருந்து மிக நல்ல திரைப்படம்... என் வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்திருந்தது... ஆனால் அது ஒரு நல்ல திரைப்படம்தானேயொழிய உலகத் திரைப்படத்தில் சேர்க்க முடியாது. அப்படத்திலும் கொஞ்சம் நாடகத்தனமும் மிகையான நடிப்பும் அழுத்தமில்லாத காட்சிகளும் உண்டு.... //

என் வாழ்க்கையையும் பிரதிபலித்த படம் தான் அது. நாடகத் தன்மை என்று ஒரே அடியாக கூறி விட எனக்கு தோன்றவில்லை. ஏனெனில் நம்மைப் போன்ற மிடில் கிளாஸ் வாசிகளின் வாழ்க்கையில் கண்டிப்பாக காதல் கொள்ளும் சலனமும் இருக்கும், தாய் தந்தையரின் பாசமும் இருக்கும். இருதலைக் கொல்லி எறும்பாய் தவிக்கும் உணர்வு தான் அந்த நடிப்பு...

மிக முக்கியமாக, நீங்கள் சொல்லுவதை போலவே...உங்களுடைய, என்னுடைய, இன்னும் சிலருடைய வாழ்க்கையை பிரதிபலித்த படம் அது..நம் கலாச்சாரத்தை சொல்லுகின்ற மற்ற நாட்டினரின் பார்வையில் அது உலகப் படம் என்பது என் கருத்து..

Unknown said...

என்னைப்பொறுத்தவரை படம் நல்லாதான் இருக்கு ஆனா சேரன் இதுல சரியா பாத்திரத்துக்கு ஏத்தமாதிரி பொருந்தல - ஒருவேல போலிசுன்னா அது விஜயகாந்து மாதிரி தான் இருக்கணும்னு எல்லோரும் எதிர்பாக்குறாங்களோ என்னவோ(including me ஹி ஹி!).....

இன்னொன்னு கடைசில குண்டு சுட்டதுக்கு அப்புறமும் நடக்குற விஷயங்கள்.......உணர்ச்சி வசப்படுத்த use செய்யப்பட்டவையே......

MANO நாஞ்சில் மனோ said...

அசத்துங்க மக்கா.....

டக்கால்டி said...

வணக்கம் விக்கி உலகம்...
சேரன் போலிஸ் வேடத்துக்கு சரியான தேர்வு தான்...
தங்கச்சி காணாம போனதிலிருந்து அவரு பொணம் போல ஆனதை அப்படி நடித்து வெளிப்படுத்தி இருக்கிறாராம்...
அதே போல குண்டடி பட்டு உணர்ச்சிவசப் படுத்தலில் உங்கள் கருத்துடன் நான் ஒத்துப் போகிறேன். ஜெயப்பிரகாஷ் நடிப்பு மிகை இல்லாமல் இருக்கும் ஆனால் அந்த அம்மையாரின் நடிப்பு பல இடங்களில் எனக்கு மிகையாகவே தெரிந்தது. வொய்.ஜி மகேந்திரனின் நடிப்பும் நல்ல இருந்தது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

டக்கால்டி said...

வணக்கம் நாஞ்சில் மனோ...
வருகைக்கு நன்றி...அசத்திடுவோம்

Anonymous said...

//இந்த பாட்டுக்கு அமீர் எதுக்கு ஆடினாரு என்று தெரில//
>>> சூப்பர் அப்பு!

டக்கால்டி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவகுமார்.

King Viswa said...

நல்லதொரு புரிதலில் எழுதப்பட்ட பதிவு.
கிங் விஸ்வா

சிக் பில் & குழுவினர் - தமிழ் காமிக்ஸ் உலகின் கவுண்டமணி செந்தில் ஜோடி

சரியில்ல....... said...

படம் பாக்கலாம்'ங்றிங்களா வேணாம்ங்கிறிங்களா?? வாரத்துக்கு நாலு படம் ரிலீஸ் ஆகி ஒரே வாரத்துல தூக்கிடுறானுகோ.... என்னை மாதிரி அப்பாவியெல்லாம் எப்புடி பாக்குறதாம்...???