Apr 28, 2011

பூவா?தலையா?

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே!

ஆதாம்-ஏவாள் என்ற இரண்டே மனிதர்கள் வாழ்ந்த காலத்திலும் அதுவும் மொழியென்ற எந்த ஒரு சமிக்ஞை அவர்கள் நடுவில் இல்லாத பொழுதும் 'கனியை உண்ணுவதா?வேண்டாமா?' என்ற கருத்து வேறுபாடு துவங்கிவிட்டது. அன்று ஆரம்பித்த 'தான் செய்வதே சரி, தான் நினைப்பது தான் சரியானது' என்ற இந்த கருத்து வேறுபாடு இன்றைய தமிழீழம் மற்றும் அயோத்தி-பாபர் மசூதி பிரச்சினை வரைக்கும் தொடர்கின்றது.அவ்வளவு ஏன் நாவரசு ராக்கிங் கேசில் மாட்டிய ஜான் டேவிட்டை ஆட்டுவித்தது எது? இந்த 'நான்' என்ற வக்கிர எண்ணம் தான். இதனால் தான் ஏகப்பட்ட பிளவுகள்,சண்டை,போர்,உயிரிழப்பு,அமைதியின்மை அத்தனையும். இப்போது நம்ம பதிவுலகத்திலும் இதே தான் நடந்து கொண்டிருக்கிறது. இதைப் பற்றி எத்தனையோ பதிவுலக நண்பர்கள் எவ்வளவோ பதிவுகள் எழுதியும் இன்னும் இது ஓய்ந்தபாடில்லை. ஆனால் அதைப் பற்றி எழுதி பஞ்சாயத்து பண்ண நான் விரும்பவில்லை. ஆதலால் அதைப் பற்றி எதுவும் குறிப்பிடப் போவதில்லை. இதற்கெல்லாம் மூல காரணியான 'கருத்து வேறுபாடு' பற்றிய ஒரு சிறு அலசல் தான் இந்த இடுகை.

ஒவ்வொரு மனிதனும் அவனுக்கென்று கொள்கைகள், கோட்பாடுகள், பழக்கவழக்கங்கள், நெறிமுறை, மதம் சார்ந்த அல்லது சாராத நம்பிக்கை, என்று ஒரு தனி பாணியை வகுத்துக்கொண்டு வாழ்கின்றான். ஒரே கொள்கைகளை ஒத்த சிலர் அதன் காரணத்தாலும், அதனால் ஒருவரை ஒருவர் இலகுவாக புரிந்து கொள்வதாலும் நல்ல நண்பர்கள் ஆகின்றனர். இதற்கு நேர்மாறான கொள்கைகளை நம்பும் சிலர் எதிர் பக்கத்தில். இது வரையில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்த இருதுருவமும் பொது வாழ்க்கையில் விவாதிக்காமல் இருக்கவே,வாழவே முடியாது.

அப்புறம் வேறென்ன? கோஷ்டி மோதல் தான்.ஒரே ஒரு விஷயம் ரொம்ப சுலபமானது. அது என்னவெனில் நாம் நம்புகின்ற விஷயம் இன்னொருவருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர்களை சாடுவதும், தன் கருத்து தான் நியாயமானது என்று அவர்கள் மேல் திணிப்பதும் தான் பிரச்சினைகளுக்கான மூல காரணம். தன் தரப்பு நியாயங்களை எடுத்து சொல்லுவதில் கூட நம்மிடம் நிதானம் இல்லை.கம்யூனிசம் என்ற ஒன்று காணமல் போனதன் காரணமும் இது தான். ஏற்கனவே வரையறுக்கப் பட்ட ஒரு கொள்கையை,கருத்தை அனைவரின் மேலும் திணிக்க முயன்றது (அது மக்களின் நலனுக்கு என்ற போதும்).


சற்று யோசித்துப் பார்க்கையில், பிறந்த குழந்தையின் மனம் எவ்வளவு புனிதமானது,தூய்மையானது. அது மாசில்லாதது. அந்த மனதில் கோபம்,சஞ்சலம்,பொறாமை,ஆத்திரம்,ஏமாற்றம்,சோகம்,ஏக்கம்,மகிழ்ச்சி,வஞ்சம்,சூழ்ச்சி,பழிவாங்குதல் என்ற எதுவும் கிடையாது. அதுதான் உண்மையான நம் ஆன்மா. சொல்லப் போனால் நாம் அனைவரும் அப்படி பிறந்தவர்களே. நம் இறப்புக்கும் பின்னும் நமது நிலை அது தான். ஆனால் வாழ்கின்ற இந்த இடைப்பட்ட காலத்தில் தான் நமது மனதில் ஒவ்வொரு சூழ்நிலைகளின் போதும் எத்தனை பரிமாற்றங்கள்.அத்தனையும் அடுத்தவனை பார்த்தே வாழ்ந்து பழகிய ஆட்டு மந்தைகள் ஆனதன் விளைவே.நமது மனம் ஒரு கண்ணாடி சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தான் அது பிரதிபலிக்கும்.அதை முறையாக பிரதிபலிக்க வைக்க நம்மால் ஏன் முடிவதில்லை?


இன்னொரு விஷயம், பிரச்சினையே இல்லாத உலகத்தை சற்று கற்பனைப் பண்ணி பாருங்கள். அப்படி இருப்பின் சில நாட்களிலேயே வாழ்க்கை சலிப்படைந்து விடும். அனைவருமே ஒரே போல ஒருவருக்கு ஒருவர் XEROX காபியாக இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும்? கற்பனை செய்யும் போதே எனக்கு சலிப்பு தட்டுகின்றது.இங்கு ஒவ்வொரு மனிதனும் தனித்துவமாக இருக்கின்றான். இருக்க விரும்புகின்றான். ஆனால் அதற்காக சக மனிதனின் உணர்வுகளை மிதிக்கவும் தயாராக இருக்கிறான்.அங்கு தான் வேறுபாடு முளை விடுகின்றது.

வாழ்கை ரொம்ப சிம்பிள் சார். மனசு ஒரு வெள்ளை சுவர் மாதிரி இருக்கு. அதை ஏன் நாம் சுத்தமாக வைத்துக்கொள்ள விரும்பாமல் கசக்கி,கிழித்து,கிறுக்கி குழப்பிக் கொண்டிருக்கிறோம்?

எனவே எப்போதும் அடுத்தவர் உணர்வுக்கு மதிப்புக் கொடுத்துப் பழகுவோம். மனித நேயத்தை வளர்ப்போம்.பூவா? தலையா? முடிவை உங்களிடமே விட்டுவிடுவது தான் சரி. அதை சொல்லத் தான் இந்த இடுகையும் கூட.


பொறுமையுடன் வாசித்த அனைவருக்கும் என் நன்றி.

Apr 27, 2011

தோனி(ணி)யவை

தோனி என்ற மனிதனின் அபார உழைப்புக்கு கிடைத்த பலன் ஒட்டு மொத்த இந்தியர்களையும் மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. ஆம் இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதைப் பற்றி தான் சொல்கிறேன். ஏப்ரல் 1 தான் உலக முட்டாள்கள் தினம். ஆனால் ஏப்ரல் 2 ஆம் தேதியோ உலக கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு நமது இந்திய அணி முட்டாள்கள் தினம் ஆக்கிவிட்டது. இந்த இடுகையை நம் அணி இறுதிப்போட்டியை வென்ற அன்றே டைப் அடித்து பிறகு வெளியிட்டுக் கொள்ளலாமென ட்ராப்டில் வைத்திருந்தேன். அது வெளியிடப்படாமலேயே இத்தனை நாள் கிடப்பில் இருந்திருக்கிறது. அதை கொஞ்சம் தூசி தட்டி உங்கள் பார்வைக்கு இதோ.




நான் கங்கூலியின் ரசிகன் என்றாலும் தோனி ஆட வந்த அவரது ஆரம்ப காலத்திலிருந்தே அவரது ரசிகனும் கூட. 90 களில் சச்சின் அவுட் ஆன உடனே மேற்கொண்டு ஆட்டத்தைப் பார்க்க முடியாது என்று நாங்கள் கிரிக்கெட் விளையாட கிளம்பிவிடுவோம். எப்படியும் ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் மீண்டும் பார்க்க வரும் போது ஜடேஜாவோ, காம்ப்ளியோ சில சமயம் விளாசுவார்கள்."அடிச்சா அப்படி ஆடணும் டா " என்று எங்கள் அன்றைய அதிரடி மன்னர்களாக விளங்கியவர்கள் ஜடேஜாவும், காம்ப்ளியும்.

பிறகு சேவாக்கின் அறிமுகம், அவர் பாணி அலாதி பாணி. கிடைக்கின்ற கேப்புகளில் பாரபட்சமே இல்லாமல் பவுலருக்கு கிரீஸ் தடவி விடுவார்.அவர் அவுட் ஆன உடனேயே, அதுவும் டிராவிட் வந்துவிட்டார் என்றாலும் மேற்கொண்டு ஆட்டத்தைப் பார்க்க முடியாது என்று நாங்கள் கிரிக்கெட் விளையாட கிளம்பிவிடுவோம். டிராவிட்டும் அவுட் ஆகிவிட்டால், முன்பெல்லாம் ஆட்டம் அம்பேல். மிடில் ஆர்டர் என்பது பேருக்கே இருந்தது.

அது தவிர எத்தனையோ விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மான்கள் அலசி தேடி சலித்து ஓய்ந்திருந்த வேளையில் திராவிட்டே சில காலம் விக்கெட் கீப்பிங்கும் பார்த்துக் கொள்ள பிறகு யுவராஜ் சிங். கைப் போன்றோர் வருகையால் தான் இந்திய அணியின் மிடில் ஆர்டரே மீண்டும் புத்துயிர் பெற்றது. சில நாள் கழித்தே தோனி என்ற வீரர் விக்கெட் கீபிங் பேட்ஸ்மானாக உள்ளே வந்தார்.அவருடைய அதிரடி ஆட்டமானது சேவாக்கை காட்டிலும் கொடூரமானது.

கிரிக்கெட் புத்தகத்தில் உள்ளபடி மட்டை சுழற்றாமல் காட்டுத் தனமாக ஆடி எதிரணியை கலங்கடித்தது நமக்கு மிகவும் பரிச்சயம். அப்போது அதிரடிக்கு பேர் போன டோனி நாளடைவில் பக்குவமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தத் தொடங்கினார்.

அதிலிருந்து ஆரம்பித்தது தான் கீழே உள்ள சில வீண் கேள்விகள்.

(1) "தோனி எப்பவுமே அணி நல்ல நிலைமைல இருக்கும் போதே களம் இறங்குகிறார். துவக்கம் சரியாக இல்லாத ஆட்டங்களில் அவர் ஒன் டவுன் இறங்குவதில்லை. துவக்கம் நன்றாக இருப்பின் மட்டுமே ஒன் டவுனோ, இல்லை செகண்ட் டவுனோ இறங்குகிறார்"

இறங்கினாலும் பிரச்சினை. இறந்காட்டாலும் பிரச்சினை தான். அணியில் காம்பிர்,சேவாக்,சச்சின்,யுவராஜ் என்று நான்கு சீனியர் பேட்ஸ்மான்கள் இருக்கும் போது முன் இறங்கினால் அவர்களை தோனி ஓரங்கட்டுகிறான் என்பது. அவர்களுக்கு அடுத்து இறங்கினால் எப்படியும் யாரவது ஒருவர் அடித்து அணியின் ஸ்கோரை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்திருப்பார்கள். அதை இன்னும் சற்று கூட்ட எதுவாக இருக்கும் என்ற ஐடியா தான்.கடந்த உலகக்கோப்பை இறுதியில் கூட அனைத்து கிரிக்கெட் ஜாம்பவான்களின் "சேம் ஓல்ட் ஷிட் " போன்ற எண்ணங்களை யுவராஜுக்கு முன்பு தான் இறங்கி ஜெயிக்க வைத்ததன் மூலம் வாயடைக்க வைப்பது தான் தோனியின் பாணி. நன்றாக கவனியுங்கள், மும்பை ஆடுகளம் அதுவும் பகலிரவு ஆட்டம், டியூ பாக்டர்,ஸ்லோ அவுட் பீல்ட், ரன் சேசிங், உலகக்கோப்பை இறுதி ஆட்டம் இத்தனை மன அழுத்தம் இருக்கும் வேளையிலும் ஸ்லோ அவுட் பீல்ட் என்பதால் ஓட்டங்களை ஒன்று,இரண்டு என்று மாங்கு மாங்கென்று ஓடி வெற்றிபெற வைத்தது அவரிடம் உள்ள லக்கா?

(2) "தோனிக்கு செம இலக்கு டா" என்று நம்மைப் போன்ற ஆசாமிகள் சொன்னாலும் கூட பரவாயில்லை. கிரிக்கெட் வர்ணனையாளர்களே "ஹீ ஹாஸ் எ கோல்டன் மிடாஸ் டச்" என்று பிதற்றுவது தான் உச்சமே.

நம்ம ஆளுங்க தான் எளிதில் உணர்ச்சி வசப்படுறவங்க ஆச்சே. சாய்பாபா லிங்கம் வரவெச்சா மந்திர சக்தி. ட்வென்டி ட்வென்டி பைனல்ல கடைசி ஓவர் ஜோகிந்தர் ஷர்மாவுக்கு
கொடுத்தும், அதில் ஸ்ரீசாந்த் கேட்ச் பிடித்தும் இந்தியா ஜெயித்தால் அது லக். இதுல அல்டிமேட் காமெடி என்னன்னா எனக்குத் தெரிந்து நாத்திகம்,பெரியாரிசம் பேசும் பல நண்பர்களே இன்னும் இந்த லக் மேட்டரை பிதற்றுவது தான்.நன்றாக கவனியுங்கள், மும்பை ஆடுகளம் அதுவும் பகலிரவு ஆட்டம், டியூ பாக்டர்,ஸ்லோ அவுட் பீல்ட், ரன் சேசிங், உலகக்கோப்பை இறுதி ஆட்டம் இத்தனை மன அழுத்தம் இருக்கும் வேளையிலும் ஸ்லோ அவுட் பீல்ட் என்பதால் ஓட்டங்களை ஒன்று,இரண்டு என்று மாங்கு மாங்கென்று ஓடி வெற்றிபெற வைத்தது அவரிடம் உள்ள லக்கா?

(3) தோனி தனது ஆட்ட உத்தியை பழைய படி அதிரடியாக மாற்றிக்கொள்ள வேண்டும்

இதற்கும் தோனியின் பதில் உலகக்கோப்பை இறுதி இன்னிங்க்ஸ் தான். எல்லாப் போட்டியிலுமே அடித்து ஆடிவிட முடியாது. ஆட்டப்போக்கை கணித்து அதற்கு ஏற்ற மாதிரி ஆடினால் தான் அணியின் வெற்றிக்கு அது பயன்படும் என்பதே காரணம். கங்கூலி உட்பட அனைவரது கருத்துக்களையும் புறந்தள்ளி அன்று எப்படி செயல்படுத்த வேண்டுமோ அதை செவ்வனே செய்வது தான் தோனியின் வெற்றியின் ரகசியம். மற்ற படி எந்த மாய மந்திரமோ, மந்திரத் தகடோ இல்லை.

ஒவ்வொரு முறையும் இந்தியா ஜெயிக்கும் போதும் கூட, தோனியை பற்றி எனது பல நண்பர்கள் கமென்ட் அடிக்கும் போதும் விஜய் படத்தை ரிலீஸ் நாள் அன்று பார்த்துவிட்டு என்ன சொல்வது என்று நொந்து போய் வரும் ரசிகன் போல இருக்க வேண்டியதாகி இருந்தது.இப்போது அவர்கள் அடித்த கமெண்ட்களுக்கு இப்போது பதில் சொல்ல நான் ரெடி. ஆனால் பாவம் அவர்கள் தான் கேள்வி கேட்க இப்போது தயாராக இல்லை.

ஒன்று மட்டும் நிச்சயம், ஜெயித்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும், தோற்றால் கல் எரியும் மீடியாக்களையும்,ஆட்களையும் இவர் என்றும் கண்டு கொள்ளப் போவதில்லை.அதே வெற்றியின் களிப்பு தலைக்கனத்தையும், தோல்வியின் கசப்பு மனவேதனையும் இவரை அண்ட வாய்ப்பே இல்லை.

Apr 26, 2011

அக்னி சாட்சி

பெட்டிக்கடைக்காரன் தரும் சில்லறைகளை
சில நேரம் அமுக்கி கொள்வதில்…
எதிர் வீட்டு பெண் தண்ணீர் பிடிக்கையில்
மறைந்திருந்து அவள் மார்பங்கங்களை பார்ப்பதில்…
உன் கடிதம் கொடுக்கும் போது மட்டும்
தபால் காரன் தலை சொரிவதில்…
கடற்கரை காதல் ஜோடிகளின்
சில்மிஷத்தைகாணும் சுண்டல் சிறுவர்கள்…
என யாருக்கு தான் இல்லை
இது போன்ற சில்லறை சபலங்கள்…
இத்தனை சாட்சிகள் இருந்தும்
இவை போதாது என்று
எவனையோ மணக்க போகிறாயாம் நீ
இன்று அக்னி சாட்சியாய்…
சிரிப்பு தான் வருகிறததடி எனக்கு…

காதல் வளையம்

நேர் கோட்டின்
இறுதியில்
இரு புள்ளிகள் போல் நாம்…
நம்மை காதல் எனும்
வளையம் வந்து
இணைப்பது தான்
எப்போது?
ஆமாம்!
மிகக் கொடியது தான்
இந்த காதல் கண்ணாடி…
பின் என் சொல்வது?
வாழ்க்கை பரிணாமததையே
வேறு ஒரு பரிமாணமாக
காட்டுகிறதே…

தலைப்பு வைக்க தெரியலை

பல நாள் திருடன்
ஒரு நாள் அகப்படு வானாம்…
நானும் பல நாள்
செய்து பார்த்து விட்டேன்
அக படவே இல்லை
என் காதல்…
ஒரு வேளை
கள்ளத்தனமாக
காதல்செய்திருப்பின்
பலித்து இருக்குமோ…

கற்றது தமிழ் பெற்றது காதல்

காதல் தமிழ் கற்றேன்
காதலால் தமிழ் கற்றேன்…
உன் பெயர் சொல்ல வந்து
சொல்ல முடியாமல்
மென்று விழுங்கிய தருணம்
நான் பெயரெச்சம் கற்றேன்…

உன்னை பின்தொடர்ந்து வரும்போது
நீ முறைத்தவுடன் திடீரென
திரும்பி கொள்ளும் தருணம்
சொற்பொருள் பின்வருநிலை அணி கற்றேன்…
நீ முறைப்பாதாக காட்டினாலும்
திரும்பி நின்று வெட்கத்துடன்சிரிக்கும் தருணம்
தான்எனக்கு முரண் தொடை விளங்கியது…
உனக்கு கவிதை எழுதும்போது
உவமை அணியையும் -
உன் கருமையான கயல் விழியில்
பண்புத் தொகையும்….
உன் பெயர் சொல்வதால்
பெயர் சொல்லையும் – உன்னிடம்
காதல் சொல்ல வந்துமுடியாமல் போகும் தருணங்களில்
வினையெச்சத்தையும் கற்ற நான்
இறுதியில் இந்த காதலால்
வஞ்ச புகழ்ச்சி அணியையும்
கற்று கொண்டேன் என் காதலியே
நீ நம் காதலை மறுத்த போது…